லாவோஸ் நாட்டில் சிக்கி தவித்த 17 இந்தியர்கள் தாயகம் திரும்பினர் - மத்திய மந்திரி ஜெய்சங்கர் தகவல்
|இந்திய தொழிலாளர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு ஆதரவு அளித்த லாவோஸ் அதிகாரிகளுக்கு நன்றி என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாகவும், அவர்கள் அங்கு பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோதமான வேலையில் ஈடுபடுத்தபடுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. லாவோசில் உள்ள இந்திய தூதரகத்தின் வாயிலாக இதற்கான முயற்சிகள் நடந்தன. இந்த நிலையில் லாவோசில் சிக்கி தவித்த 17 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வௌியிட்ட பதிவில்,
"மோடியின் உத்தரவாதம், உள்நாட்டில் உள்ள மக்களுக்கு மட்டும் இன்றி, வெளிநாட்டில் உள்ள இந்தியர்களுக்கும் வேலை செய்கிறது. லாவோசில் பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோத வேலைகளில் சிக்கிய 17 இந்திய தொழிலாளர்கள், தாயகம் திரும்பியுள்ளனர்.
பிரச்சினைக்கு தீர்வுகாண வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்ட லாவோசில் இருக்கும் இந்திய தூதரகத்துக்கு பாராட்டுகள். இந்திய தொழிலாளர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு ஆதரவு அளித்த லாவோஸ் அதிகாரிகளுக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.