"மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி" - சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேச்சு
|பிரதமர் மோடிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது என சி.டி.ரவி கூறினார்.
பெங்களூரு,
பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளரும், சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி நேற்று கர்நாடக மாநிலம் உப்பள்ளி பகுதிக்கு சென்றார். அங்கு பா.ஜனதா பிரமுகர்களை சந்தித்து, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது;-
"காங்கிரஸ் கட்சி இந்தியாவில் மீண்டும் ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது. காங்கிரசுக்கு சமூகநீதி, நியாயம் எதுவும் கிடையாது. குடும்ப அரசியல் தான் காங்கிரசின் ஜனநாயகம். காங்கிரசில் குடும்ப உறுப்பினர்கள் தான் தேசிய தலைவர்களாக உள்ளனர்.
பா.ஜனதாவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி தலைவரை தேர்ந்தெடுக்கிறோம். பிரதமர் மோடிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. மீண்டும் அவர் பிரதமர் ஆவது உறுதி. கர்நாடகத்தில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்போம்."
இவ்வாறு அவர் கூறினார்.