< Back
தேசிய செய்திகள்
இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்தும் மோடி மவுனம் காக்கிறார்; காங்கிரஸ்  குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்தும் மோடி மவுனம் காக்கிறார்; காங்கிரஸ் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
26 May 2024 9:45 AM IST

இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்தபோதிலும் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார் என்று மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.

சிம்லா,

இமாசலபிரதேச மாநிலம் ரோரு நகரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

மக்களையும், அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாக்க காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படாவிட்டால், ஜனநாயகமும், அதன்கீழ் வழங்கப்பட்ட உரிமைகளும் பறிபோய்விடும்.

மோடி அரசு, பணக்காரர்களை ஆதரிக்கிறது. காங்கிரஸ் கட்சியோ ஏழைகளுடன் நிற்கிறது. நாட்டின் முதலாவது பிரதமர் நேரு, உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கினார். அவை ஏழைகளுக்கு உதவியாக இருந்தன.

ஆனால், பிரதமர் மோடி 55 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி செய்தது பற்றி கணக்கு காட்டுமாறு கேட்கிறார். ஒவ்வொரு காசுக்கும் கணக்கு காட்ட காங்கிரஸ் தயார். முதலில், 10 ஆண்டுகால செயல்பாடு பற்றி மோடி கணக்கு காட்ட வேண்டும்.

நாங்கள் பாகிஸ்தானுடன் போரிட்டு, வங்காளதேசத்துக்கு சுதந்திரம் பெற்று தந்தோம். சீனா, இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகளையும், சாலைகளையும் கட்டி வருகிறது. ஆனால் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார். 56 அங்குல மார்பு எங்கே போனது?கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள சேதத்துக்காக இமாசலபிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர்சிங் சுக்கு மத்திய அரசிடம் ரூ.10 ஆயிரம் கோடி நிவாரண நிதி கேட்டார். ஆனால், வெறும் கற்கள் மட்டும்தான் கிடைத்தன.

ஆப்பிள் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்க வழி செய்வதாக பிரதமர்மோடிஉறுதி அளித்தார். ஆனால், ஆப்பிள் மீதான இறக்குமதி வரியை குறைத்து தீங்கு விளைவித்துள்ளார். அவர் சொல்வது ஒன்று, செய்வது வேறு ஒன்று.அவர் உறுதி அளித்தபடி ஒவ்வொருவரது வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தினாரா? 20 கோடி வேலைவாய்ப்புகளை அளித்தாரா? விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கினாரா?புல்லட் ரெயில் திட்ட செலவு ரூ.1 லட்சம் கோடியில் இருந்து ரூ.3 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. ஆனால் இன்னும் ரெயில் கட்டப்படவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்