< Back
தேசிய செய்திகள்
மோடி அரசின் அகந்தை, நாடாளுமன்ற அமைப்பையே அழித்து விட்டது - காங்கிரஸ் கட்சி வேதனை

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

மோடி அரசின் அகந்தை, நாடாளுமன்ற அமைப்பையே அழித்து விட்டது - காங்கிரஸ் கட்சி வேதனை

தினத்தந்தி
|
26 May 2023 4:20 AM IST

மோடி அரசின் அகந்தை, நாடாளுமன்ற அமைப்பேயே அழித்து விட்டது என்று காங்கிரஸ் கட்சி வேதனை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை மறுதினம் (28-ந்தேதி) திறந்து வைக்க உள்ளார். நாட்டின் தலைவரும், முதல் குடிமகளும், ஜனாதிபதியுமான திரவுபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 19 கட்சிகள் புதிய நாடாளுமன்றக்கட்டிட திறப்பு விழாவைப் புறக்கணிக்கின்றன.

நாடாளுமன்ற அமைப்பே அழிப்பு

இந்த விவகாரத்தில் பிரதமரின் நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடி உள்ளது.

இது பற்றி காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

மோடி அவர்களே, நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் திருக்கோவில். இது மக்களால் உருவாக்கப்பட்டது. ஜனாதிபதி அலுவலகம், நாடாளுமன்றத்தின் முதல் அங்கம் ஆகும். உங்கள் அரசின் அகந்தை, நாடாளுமன்ற அமைப்பையே அழித்து விட்டது.

140 கோடி இந்தியர்கள் விருப்பம்

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைப்பதில் ஜனாதிபதியின் சிறப்பு உரிமையைப் பறித்து எடுத்துக்கொள்வதின்மூலம் நீங்கள் காட்ட விரும்புவது என்ன? இதைத்தான் 140 கோடி இந்தியர்களும் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்று அவர் கூறி உள்ளார்.

அரசியல் சாசன சிறப்புரிமை மறுப்பு

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேசும் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ராஞ்சியில் நேற்று நாட்டின் மிகப்பெரிய நீதித்துறை வளாகத்தை ஜார்கண்ட் ஐகோர்ட்டு வளாகத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைத்துள்ளார். ஆனால் ஒற்றை மனிதரின் எல்லாமே நானே என்ற அகந்தையும், ஆசையும்தான் டெல்லியில் 28-ந் தேதி நாடாளுமன்றக் கட்டிடத்தை நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி திறந்து வைக்கும் அரசியல் சாசன சிறப்புரிமையை மறுக்கிறது.

அசோகா மாபெரும் மன்னர். அக்பர் மாபெரும் மன்னர். மோடி திறப்பாளர் என்று அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்