பொதுத்துறை நிறுவனங்களை அழிக்கிறது, மோடி அரசு - கார்கே குற்றச்சாட்டு
|பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசு அழித்துக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டி உள்ளார்.
கார்கே குற்றச்சாட்டு
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு மீது காங்கிரஸ் கட்சித்தலைவர் கார்கே தொடர்ந்து குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்.
அந்த வகையில் அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
லட்சக்கணக்கான அரசு வேலைகளை பறிப்பதன்மூலம் பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசு அழித்துக் கொண்டிருக்கிறது. 'மேக் இன் இந்தியா' என்னும் 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் தொடர்பாக நடைபெறுகிற தீவிர பிரசாரம், பிம்பத்தை உயர்த்திக்காட்டுவதற்காகத்தான். அதில் இருந்து இந்த நாட்டுக்கு கிடைத்தது என்ன?
மோடி அரசுக்கு நம்பிக்கை இல்லை
நாட்டின் பொருளாதாரத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதில் மோடி அரசுக்கு நம்பிக்கை இல்லை. 7 பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் வேலைகளை மோடி அரசு பறித்தது எதற்காக?
மத்திய அரசில் பெண்களின் வேலைவாய்ப்பு 42 சதவீதம் குறைந்தது ஏன்? ஒப்பந்தம் மற்றும் சாதாரண அரசு வேலைகள் 88 சதவீதம் அதிகரித்தது ஏன்?
இவ்வாறு கார்கே தனது டுவிட்டர் பதிவுகளில் கூறி உள்ளார்.
வீடியோ பகிர்வு
மேலும், மத்திய அரசுக்கு சொந்தமான 7 பொதுத்துறை நிறுவனங்களில் 2013-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையில், லட்சக்கணக்கானோர் வேலை இழந்து இருப்பது குறித்த விவரங்களைக் கொண்ட 1½ நிமிட வீடியோவையும் கார்கே தனது டுவிட்டர் பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.