< Back
தேசிய செய்திகள்
ரெயில் விபத்துக்கு மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்-ராகுல் காந்தி குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

ரெயில் விபத்துக்கு மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்-ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
18 Jun 2024 7:55 AM IST

மேற்கு வங்காளத்தில் நடந்த ரெயில் விபத்துக்கு மோடி அரசின் முற்றிலும் தவறான நிர்வாகமே காரணம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தின் ஜல்பாய்குரியில் நேற்று நடந்த ரெயில் விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர்.நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த விபத்து தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், 'தவறான நிர்வாகம் மற்றும் அலட்சியத்தின் விளைவால் ரெயில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்த யதார்த்தத்துக்கு இன்றைய (நேற்று) விபத்து மற்றொரு உதாரணம்' என குறிப்பிட்டு உள்ளார். ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக இந்த அப்பட்டமான அலட்சியம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவோம் எனக்கூறியுள்ள ராகுல் காந்தி, இந்த விபத்துகளுக்கு மோடி அரசை பொறுப்பேற்கச் செய்வோம் என்றும் உறுதிபட தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

மேற்கு வங்காளத்தின் ஜல்பாய்குரியில் நடந்த ரெயில் விபத்து மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர். விபத்தின் கோர காட்சிகள் மிகுந்த வலியை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த துயரமான வேளையில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டுகிறேன்.

இன்றைய பயங்கரம் இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டல். எந்த தவறும் செய்யாதீர்கள், நாங்கள் எங்கள் கேள்விகளில் உறுதியுடன் இருப்போம். மேலும் இந்திய ெரயில்வேயை கைவிட்டதற்கு மோடி அரசை பொறுப்பேற்கச் செய்வோம்.கடந்த 10 ஆண்டுகளாக ெரயில்வே அமைச்சகத்தில் முற்றிலும் தவறான நிர்வாகத்தில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. இதுவே விபத்துகளுக்கு காரணம். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, மோடி அரசு ெரயில்வே அமைச்சகத்தை எப்படி சுய விளம்பரத்திற்கான தளமாக மாற்றியிருக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவது நமது கடமையாகும்.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்