ஜி 20 மாநாட்டை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துகிறது - மத்திய அரசு மீது காங்கிரஸ் தாக்கு
|ஜி 20 மாநாட்டை மத்திய அரசு தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடக்கிறது. இந்த மாநாட்டை மத்திய அரசு தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' தளத்தில் கூறுகையில், 'ஜி20 அமைப்பு 1999-ம் ஆண்டு உருவானது. அதற்கு பிறகு 17 நாடுகளில் இந்த அமைப்பின் உச்சி மாநாடு நடத்தப்பட்டு உள்ளது. தற்போது இந்தியாவின் முறை. ஆனால் இந்த மாநாட்டை வைத்து இங்கு நடத்தப்படும் தேர்தல் பிரசாரமும், மிகப்பெரிய பிம்பத்தை உருவாக்கும் முயற்சிகளும் வேறு எந்த நாட்டிலும் நடந்ததில்லை. உண்மையில், முக்கியமான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே இது செய்யப்படுகிறது' என சாடியுள்ளார்.
கடந்த 1983-ம் ஆண்டு இந்தியா 100 நாடுகளுக்கு மேல் உறுப்பினராக கொண்ட அணிசேரா நாடுகளின் மாநாடு, அதைப்போல காமன்வெல்த் உச்சி மாநாடு போன்ற நிகழ்வுகளையும் நடத்தியிருப்பதாக கூறியுள்ள ஜெய்ராம் ரமேஷ், ஆனால் அந்த நிகழ்வுகளை தங்கள் தேர்தல் பலனுக்கான வாய்ப்பாக அப்போதைய அரசுகள் பயன்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.