< Back
தேசிய செய்திகள்
சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவு இல்லாமல் மோடி 3-வது முறை பிரதமராகி இருக்க முடியாது: ஜெய்ராம் ரமேஷ்
தேசிய செய்திகள்

'சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவு இல்லாமல் மோடி 3-வது முறை பிரதமராகி இருக்க முடியாது': ஜெய்ராம் ரமேஷ்

தினத்தந்தி
|
9 Jun 2024 2:21 AM GMT

சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவு இல்லாமல் மோடி 3-வது முறையாக பிரதமராகி இருக்க முடியாது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் இந்தியாவை ஆண்டு வந்த பா.ஜ.க.வுக்கு இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை(272 இடங்கள்) கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 240 இடங்களை மட்டுமே பா.ஜ.க. கைப்பற்றியது. அதே சமயம் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. இதனையடுத்து 3-வது முறை இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். அவரது பதவியேற்பு விழா டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவு இல்லாமல் மோடி 3-வது முறையாக பிரதமராகி இருக்க முடியாது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

"2024 மக்களவை தேர்தலில் நரேந்திர மோடிக்கு தனிப்பட்ட வகையிலும், அரசியல் ரீதியாகவும், தார்மீக அடிப்படையிலும் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் மூன்றில் ஒரு பங்கு பிரதமர் மட்டுமே, ஏனெனில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவு இல்லாமல் மோடி 3-வது முறையாக பிரதமராகி இருக்க முடியாது.

240 தொகுதிகளை வைத்துக்கொண்டு மோடி பிரதமராகிறார். ஜவகர்லால் நேரு தொடர்ந்து 3 முறை தனிப்பெரும்பான்மையுடன் பிரதமர் ஆனார். இருப்பினும் அவர் ஜனநாயகவாதியாகவே இருந்தார். ஆனால் பிரதமர் மோடியால் தனிப்பெரும்பான்மையுடன் பிரதமராக முடியவில்லை.

மோடியின் நயவஞ்சகத்திற்கு அளவே கிடையாது. அரசியலமைப்பை சீர்குலைக்கும் வகையில் அவரது ஆட்சி இருந்தது. மோடி அரசு முறைகேடான அரசாக இருந்தது. பணம், அதிகாரம், ஊடகம், மிரட்டல் மற்றும் அச்சுறுத்தலை பயன்படுத்தி ஆட்சி செய்தார்கள். இந்த புதிய அரசாங்கத்தை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமாக நான் பார்க்கவில்லை, ஏனெனில் மக்களின் தீர்மானம் மோடிக்கு எதிராகவே உள்ளது."

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்