< Back
தேசிய செய்திகள்
சுயநலம், கீழ்த்தர அரசியலால் நவீன ரெயில்வே இருட்டடிப்பு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

சுயநலம், கீழ்த்தர அரசியலால் நவீன ரெயில்வே இருட்டடிப்பு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
12 April 2023 1:59 PM IST

ரெயில்வே எப்போதும் நவீனமடைய விடாத வகையில் சுயநலம் மற்றும் கீழ்த்தர அரசியல் இருட்டடிப்பு செய்து விட்டது என பிரதமர் மோடி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் இருந்து காணொலி காட்சி வழியே அஜ்மீரில் இருந்து டெல்லி கன்டோன்மென்ட் வரை செல்ல கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடக்கி வைத்து உள்ளார்.

இதன்பின் அவர் பேசும்போது, சுதந்திரத்திற்கு பின்னர், ரெயில்வே துறை நவீனமடைவதில் அரசியல் விருப்பங்கள் எப்போதும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. துரதிர்ஷ்ட வகையில், சுயநலம் மற்றும் கீழ்த்தரம் வாய்ந்த அரசியல் ஆகியவற்றால் ரெயில்வே துறை நவீனமடைந்து விடாதபடிக்கு எப்போதும் இருட்டடிப்பு செய்யப்பட்டு வந்தது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பெரிய அளவிலான ஊழல், ரெயில்வேயில் வளர்ச்சி ஏற்பட விடாமல் செய்ததுடன், ரெயில்வேயில் பணியாளர் தேர்வு நடைமுறையிலும் வெளிப்படை தன்மை இல்லாமல் செய்து விட்டது.

யார் ரெயில்வே மந்திரியாக வேண்டும் என்பது அரசியல் விருப்பம் சார்ந்து முடிவு செய்யப்பட்டது. அரசியல் விருப்பங்களுக்காக, சில ரெயில்கள் அறிவிக்கப்பட்டு, உண்மையில் அது ஓடாமலேயே இருக்கும். இந்த நிலைமையானது ஏழைகளின் நிலம் பறிக்கப்பட்டு, அவர்களுக்கு ரெயில்வேயில் வேலை வழங்கப்பட்டது போன்றது.

ரெயில்வேயின் பாதுகாப்பு, தூய்மை என ஒவ்வொரு விசயமும் புறக்கணிக்கப்பட்டன. 2014-ம் ஆண்டுக்கு பின்னரே, இந்த நடைமுறைகளில் புரட்சிகர உருமாற்றம் நடைபெற தொடங்கியது என அவர் கூறியுள்ளார்.

ரெயில்வே துறையின் முன்னாள் மத்திய மந்திரி லாலு பிரசாத் யாதவ், அவருடைய மனைவி மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான ராப்ரி தேவி, அவரது இளைய மகன் மற்றும் பீகார் துணை முதல்-மந்திரியாக உள்ள தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் மீது மத்திய விசாரணை அமைப்புகள் வழக்கு பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வரும் சூழலில் பிரதமர் மோடி இதனை குறிப்பிட்டு உள்ளார்.

அவர் தொடர்ந்து, இன்றைய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணம் ஆனது, நாளைய வளர்ச்சிக்கான இந்தியாவின் பயணத்தில் நம்மை வழி நடத்தி செல்லும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த ரெயில்களில் 60 லட்சம் பேர் பயணித்து உள்ளனர்.

இதனால் மக்களின் நேரம் சேமிக்கப்படுகிறது. அதிவிரைவு முதல் அழகான வடிவமைப்பு வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது என அவர் கூறியுள்ளார். இதனால், ராஜஸ்தானில் சுற்றுலா துறை வளர்ச்சி அடையும் என கூறியுள்ளார்.

இந்த ரெயில் முறைப்படி வருகிற 13-ந்தேதி (நாளை) முதல் இயங்க தொடங்கும். அஜ்மீரில் இருந்து டெல்லி கன்டோன்மென்ட் வரை செல்லும் இந்த ரெயில் வழியில் ஜெய்ப்பூர், ஆல்வார் மற்றும் குர்காவன் பகுதியில் நின்று செல்லும்.

மேலும் செய்திகள்