இஸ்ரேலில் வேலை தேடும் ஆயிரக்கணக்கான உ.பி., அரியானா இளைஞர்கள் - காங்கிரஸ் சாடல்
|நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளதாக மத்திய அரசு கூறியதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இஸ்ரேலில் வேலைக்காக உத்தரபிரதேசம் மற்றும் அரியானாவில் இளைஞர்கள் வரிசையில் நிற்பதாகவும், இது நாட்டின் கடுமையான வேலையின்மை நிலைமையை பிரதிபலிப்பதாகவும் மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் வலைதளத்தில், "போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலில் பணியாற்றி வந்த பாலஸ்தீனிய மக்களுக்கு மாற்றாக, அங்கு வேலை வாய்ப்பு கிடைக்குமா என்ற ஏக்கத்தில், உத்தரபிரதேசம் மற்றும் அரியானாவில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர்.
நேற்றைய சர்வதேச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின் வெளிச்சத்தில் முக்கியத்துவம் பெற்ற நெறிமுறை, தார்மீக மற்றும் அரசியல் பிரச்சினைகளை ஒருபுறம் விட்டுவிடுவோம். இது நமது சொந்த நாட்டில் உள்ள கடுமையான வேலையின்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லையா..? மேலும் இது ஒரு வளர்ந்து வரும் வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருளாதாரத்தின் கூற்றுகளை கேலிக்கூத்தாக்கவில்லையா..?" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக காசாவில் இஸ்ரேல், இனப்படுகொலையில் ஈடுபடுவதாக ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் தென்ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்தது. இதில் விசாரணை நடைபெற்று வரும் நிலையல் நேற்று கோர்ட்டு இடைக்கால தீர்ப்பு வழங்கியது. அதில், காசாவில் இனப்படுகொலை தவிர்க்க இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.