குழந்தை இல்லாததற்காக கேலி: 3 முதியவர்கள் கொடூர கொலை; தொழிலாளி வெறிச்செயல்
|பஞ்சாப்பில் குழந்தை இல்லாததற்காக கேலி செய்த விவகாரத்தில், அண்டை வீட்டில் வசித்த 3 முதியவர்கள் கொடூர கொலை செய்யப்பட்டனர்.
லூதியானா,
பஞ்சாப்பின் லூதியானா நகரில் நியூ ஜானக்புரி பகுதியில் வசித்து வந்தவர் சமன் லால் (வயது 74). இவரது மனைவி சுரீந்தர் கவுர் (வயது 70). சமன் லாலின் தாயார் சுர்ஜித் கவுர் என்ற ஜீத்து (வயது 95).
இவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் வசித்து வருபவர் ராபின் என்ற முன்னா (வயது 42). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருமணம் நடந்து 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனை சுரீந்தர் கவுர் அடிக்கடி கூறி, முன்னாவை எரிச்சலடைய செய்து உள்ளார்.
இந்நிலையில், ஆத்திரம் முற்றியதில், சுரீந்தரை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார். இந்நிலையில், சுரீந்தர் உள்பட முதியவர்கள் 3 பேரும் வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். லூதியானா காவல் ஆணையாளர் மன்தீப் சிங் சித்து செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று கூறும்போது, சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாவை கைது செய்து விசாரித்ததில் நடந்த செயலை அவர் ஒப்பு கொண்டார்.
அவருக்கு திருமணம் நடந்து 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. அதனால், சுரீந்தர் இதுபற்றி மற்ற அண்டை வீட்டுக்காரர்கள் முன்னிலையில் கூறி கேலி செய்து வந்து உள்ளார். இதனால், சுரீந்தரை கொலை செய்ய முடிவு செய்து முடிவில், 3 பேரையும் கொலை செய்து உள்ளார் என கூறியுள்ளார்.
சமையல் கியாஸ் சிலிண்டரை கசிய விட்டு, நறுமண பத்திகளை எரிய வைத்து, வீடு தீப்பிடித்து எரிந்து விபத்தில் அவர்கள் 3 பேரும் உயிரிழந்தது போன்று காட்ட அவர் முயற்சித்து உள்ளார். ஆனால், அது தோல்வியில் முடிந்து விட்டது.
இதுதவிர, முன்னாவிடம் இருந்து வீடியோ கேமிரா ஒன்று, 7 கேசட்டுகள், மொபைல் போன் ஒன்று, சில ஆவணங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அவை அந்த வீட்டில் இருந்து திருடப்பட்டு உள்ளன.
சம்பவத்தன்று, கோழிகளுக்கு முன்னா தீவனம் வைத்து கொண்டு இருந்து உள்ளார். அப்போது, மாடிப்படியில் ஏறிய சுரீந்தர் மீண்டும் முன்னாவை பார்த்ததும் கேலி செய்து உள்ளார். இதில் ஆத்திரமடைந்த முன்னா, சுத்தியலை கொண்டு வீட்டு பொது சுவரை உடைத்து உள்ளே சென்று உள்ளார்.
ஆனால், காலை 6 மணியளவில் கவுர் வீட்டில் இல்லை. அவரை தேடியுள்ளார். சுரீந்தர் கழிவறையில் இருந்து உள்ளார். இதனால், அவர் வெளியே வரும் வரை முன்னா மறைந்து இருந்து உள்ளார்.
சுரீந்தர் வெளியே வந்ததும் சுத்தியலால் தாக்கியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு, கணவர் லால் மற்றும் ஜீத்து ஓடி வந்து உள்ளனர். அவர்களையும் தாக்கி உள்ளார். இந்த வழக்கில் முன்னாவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டு உள்ளது.