செல்போன் கட்டண உயர்வு: பொதுமக்கள் மீது ஆண்டுக்கு ரூ.34,824 கோடி சுமை - காங்கிரஸ் கண்டனம்
|நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை செல்போன் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதன் பின்னணி என்ன என்று ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் உள்ள 109 கோடி செல்போன் பயனர்கள் மீது மோடி அரசு ஆண்டுக்கு ரூ.34,824 கோடி சுமையை ஏற்றியுள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, "ஜூலை 3 முதல் இந்த நாட்டில் செல்போன் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள 109 கோடி செல்போன் பயனர்கள் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் செல்போன்களை பயன்படுத்துகின்றனர். இந்த 109 கோடி செல்போன் பயனர்கள் மீது மோடி அரசு ஆண்டுக்கு ரூ.34,824 கோடி சுமையை ஏற்றியுள்ளது.
இந்திய செல்போன் சந்தையில் மூன்று செல்போன் ஆபரேட்டர்கள் மட்டுமே உள்ளனர். ரிலையன்ஸ் ஜியோ - 48 கோடி பயனர்களையும், ஏர்டெல் - 39 கோடி பயனர்களையும், வோடபோன் ஐடியா - 22 கோடியே 37 லட்சம் பயனர்களையும் கொண்டுள்ளன. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிக்கையின்படி, செல்போன் நிறுவனங்கள் ஒவ்வொரு செல்போன் வாடிக்கையாளரிடமிருந்தும் மாதத்திற்கு 152.55 பைசா சம்பாதிக்கின்றன.
ஜூன் 27 அன்று, ரிலையன்ஸ் ஜியோ அதன் கட்டணங்களை 12 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக வரை உயர்த்தியது. ஜூன் 28 அன்று, ஏர்டெல் அதன் கட்டணங்களை 11 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாக வரை உயர்த்தியது. ஜூன் 29 அன்று, வோடபோன் ஐடியாவும் அதன் கட்டணங்களை 10 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக வரை உயர்த்தியது. மூன்று நிறுவனங்களும் ஆலோசனை நடத்தி வெறும் 72 மணி நேரத்தில் செல்போன் கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது தெளிவாகிறது.
இது தொடர்பாக மோடி அரசுக்கு நாங்கள் முக்கிய கேள்விகளை எழுப்புகிறோம். நாட்டின் செல்போன் பயனர்களில் 92% பயனர்களைக் கொண்டுள்ள 3 தனியார் செல்போன் நிறுவனங்களும் எவ்வாறு தன்னிச்சையாக செல்போன் கட்டணத்தை உயர்த்தலாம்? மோடி அரசின் எவ்வித மேற்பார்வையும், கட்டுப்பாடும் இன்றி, ஆண்டுக்கு ரூ. 34,824 கோடி உயர்த்தப்பட்டிருப்பது எப்படி? 109 கோடி செல்போன் பயனர்கள் உள்பட இந்திய மக்களுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் தங்கள் கடமையை, பொறுப்பை நிறைவேற்றத்தவறியது ஏன்? 109 கோடி இந்தியர்களின் மீது ரூ. 34,824 கோடி சுமத்தப்பட்டுள்ள இந்த விவகாரம், நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்கப்பட்டதன் பின்னணி என்ன?" என கேள்வி எழுப்பி உள்ளார்.