< Back
தேசிய செய்திகள்
மணிப்பூர்: பதற்றமான சூழல் நிலவுவதால் 5 நாட்களுக்கு மொபைல் போன் இணையதள சேவைகள் முடக்கம்!
தேசிய செய்திகள்

மணிப்பூர்: பதற்றமான சூழல் நிலவுவதால் 5 நாட்களுக்கு மொபைல் போன் இணையதள சேவைகள் முடக்கம்!

தினத்தந்தி
|
7 Aug 2022 9:17 AM IST

சமூக விரோதிகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வெறுப்புப் பேச்சுகளை பரப்புகின்றதன் காரணமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம்பால்,

மணிப்பூர் முழுவதும் 5 நாட்களுக்கு மொபைல் போன் இணையதள சேவைகள் முடக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அம்மாநில உள்துறை சிறப்புச் செயலாளர் எச் ஞானபிரகாஷ் சனிக்கிழமை பிறப்பித்த உத்தரவில், சில சமூக விரோதிகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொதுமக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் வெறுப்புப் பேச்சுகளை பரப்புகின்றனர். இதன் காரணமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஷ்னுபூர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில், சனிக்கிழமை மாலை பூகாக்சாவ் இகாங்க் பகுதியில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த 4 நபர்களால் வாகனம் ஒன்று எரிக்கப்பட்டது. இந்த குற்றச்செயல் காரணமாக அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. வகுப்புவாத கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நிகழலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வெள்ளிக்கிழமையன்று மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் (ஏடிஎஸ்யூஎம்), தேசிய நெடுஞ்சாலைகளில் காலவரையற்ற பொருளாதார முற்றுகை போராட்டத்தை தொடங்கியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது. மணிப்பூரில் ஆளும்கட்சியாக உள்ள பாஜக அரசு, தங்கள் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டி இந்த போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர்.

இதனையடுத்து, பிஷ்ணுபூர் மாவட்ட கலெக்டர், மாவட்டம் முழுவதும் இரண்டு மாதங்களுக்கு 144தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த நிலையில், மணிப்பூர் முழுவதும் 5 நாட்களுக்கு மொபைல் போன் இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்