< Back
தேசிய செய்திகள்
மத்திய பிரதேசத்தில் போலீசாரைத் தாக்கி லாக்கப்பில் இருந்த 3 கைதிகளை விடுவித்த கும்பல்..!
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் போலீசாரைத் தாக்கி லாக்கப்பில் இருந்த 3 கைதிகளை விடுவித்த கும்பல்..!

தினத்தந்தி
|
7 April 2023 7:15 PM IST

மத்திய பிரதேசத்தில் காவல் நிலையத்திற்குள் நுழைந்து போலீசாரைத் தாக்கி லாக்கப்பில் இருந்த 3 கைதிகளை கும்பல் ஒன்று விடுவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புர்கான்பூர்,

மத்திய பிரதேச மாநிலம் புர்கான்பூர் மாவட்டத்தில் உள்ள நேபாநகர் காவல் நிலையம் மீது இன்று அதிகாலை 3 மணியளவில் ஒரு கும்பல் திடீரென தாக்குதல் நடத்தியது. போலீசாரை தாக்கியதுடன் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். மேலும், காவல் நிலைய லாக்கப்பில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 குற்றவாளிகளை விடுவித்தனர். சுமார் 60 பேர் ஒன்றுதிரண்டு வந்து தாக்கியதால் காவலர்கள் திக்குமுக்காடினர். வன்முறைக் கும்பலை தடுக்க முடியாமல் திணறினர். இந்த தாக்குதலில் 4 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது. தாக்குதல் குறித்து தகவலறிந்த மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு கூறுகையில், 'தலைக்கு 32 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்ட கொள்ளையன் ஹேமா மெக்வால் மற்றும் அவனது கூட்டாளிகள் இருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு லாக்கப்பில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை இன்று ஒரு கும்பல் வந்து விடுவித்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.' என்று கூறினார்.

மேலும் செய்திகள்