பா.ஜனதா எம்.எல்.சி. வீடு, அலுவலகத்தில் வணிக வரித்துறை சோதனை
|பா.ஜனதா எம்.எல்.சி. சங்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க வைத்திருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான பரிசுப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஹாவேரி:
பா.ஜனதா எம்.எல்.சி. சங்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க வைத்திருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான பரிசுப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சட்டசபை தேர்தல்
கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்கள். அத்துடன் வாக்காளர்களை கவருவதற்காக பரிசுப்பொருட்களை வாரி வழங்கி வருகின்றனர். மேலும் கறி விருந்தும் அளித்து வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கர்நாடக மேல்சபை உறுப்பினர், தனது தொகுதி மக்களுக்கு கொடுப்பதற்காக வைத்து இருந்த தட்டுகள்,சேலைகள், பள்ளி மாணவர்களுக்கான பைகள், குக்கர்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுப்பொருட்களை வணிக வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
பா.ஜனதாவை சேர்ந்த நியமன எம்.எல்.சி.
ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூரை சேர்ந்தவர் சங்கர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராணி பென்னூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றார். பின்னர் கூட்டணி ஆட்சியில் காங்கிரசுக்கு ஆதரவு அளித்தார். இதையடுத்து அவர் வனத்துறை மந்திரியாக பொறுப்பு வகித்தார். கூட்டணி ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததில், ் இவரும் ஒருவர். இதனால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து அவர் பா.ஜனதாவில் சேர்ந்தார்.
ஆனால் அவருக்கு இடைத்ேதர்தலில் போட்டியிட பா.ஜனதா டிக்கெட் கொடுக்கவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருந்து வந்தார். இதையடுத்து அவரை கர்நாடக மேல்சபை நியமன எம்.எல்.சி.யாக பா.ஜனதா நியமித்து சமாதானப்படுத்தியது.
6 ஆயிரம் சேலைகள்
ஆனால் வருகிற சட்டசபை தேர்தலில் ராணிபென்னூர் தொகுதியில் போட்டியிட அவர் பா.ஜனதா சார்பில் போட்டியிட ஆர்வம் காட்டி வந்தார். கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காவிட்டால் சுயேச்சையாக களமிறங்கவும் அவர் தீவிரம் காட்டி வந்தார்.
இந்த நிலையில் ஹாவேரி மாவட்டம் பைரலிங்கேஷ்வர் பகுதியில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது அலுவலகத்தின் முன்பகுதியில் குவியல், குவியலாக பள்ளி பைகள், தட்டுகள், சேலைகள் ஆகியவை இருந்தன. அதில் 6 ஆயிரம் சேலைகள், 9 ஆயிரம் குக்கர்களும் அடங்கும்.
ரூ.40 லட்சம் பொருட்கள்
மேலும் அவற்றில் எம்.எல்.சி. சங்கரின் புகைப்படம் அச்சிடப்பட்டு இருந்தது. ஒட்டுமொத்தமாக ரூ.40 லட்சம் மதிப்பிலான பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதுகுறித்த ஆவணங்களையும் அதிகாரிகள் கேட்டு பெற்றுக்கொண்டனர். இந்த பரிசுப் பொருட்களை சட்டசபை தேர்தலையொட்டி அவர் பதுக்கிவைத்து வாக்காளர்களுக்கு வினியோகிக்க இருந்ததாக கூறப்படுகிறது. இந்த அதிரடி சோதனையால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.