< Back
தேசிய செய்திகள்
ஆசிரியர்-பட்டதாரி தொகுதிகளில் அமைதியாக தேர்தல் நடந்தது; ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்கிறது
தேசிய செய்திகள்

ஆசிரியர்-பட்டதாரி தொகுதிகளில் அமைதியாக தேர்தல் நடந்தது; ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்கிறது

தினத்தந்தி
|
14 Jun 2022 2:30 AM IST

கர்நாடக மேல்-சபையில் 4 இடங்கள் காலியாவதையொட்டி ஆசிரியர்-பட்டதாரி தொகுதிகளில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை நாளை (15-ந் தேதி) நடக்கிறது.

பெங்களூரு

கர்நாடக மேல்-சபையில் 4 இடங்கள் காலியாவதையொட்டி ஆசிரியர்-பட்டதாரி தொகுதிகளில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை நாளை (15-ந் தேதி) நடக்கிறது.

தகுதியான வாக்காளர்கள்

கர்நாடக மேல்-சபையில் காலியாகும் வடமேற்கு பட்டதாரி தொகுதி, கர்நாடக தெற்கு பட்டதாரி, கர்நாடக வடமேற்கு ஆசிரியர், கர்நாடக மேற்கு ஆசிரியர் தொகுதிகளுக்கு ஜூன் மாதம் 13-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் மேல்-சபை முன்னாள் தலைவர் பசவராஜ் ஹொரட்டி உள்பட 49 பேர் போட்டியில் உள்ளனர்.

இந்த தேர்தலில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 922 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் ஆவர். இந்த வாக்காளர்களின் வசதிக்காக 4 தொகுதிகளிலும் 607 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் 4 தொகுதிகளிலும் திட்டமிட்டப்படி நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, மைசூரு, மண்டியா, ஹாசன், சாம்ராஜ்நகர், உத்தரகன்னடா, தார்வார், ஹாவேரி, கதக் ஆகிய 11 மாவட்டங்களில் இந்த தேர்தல் நடைபெற்றது.

கடமையை ஆற்றினர்

வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. தகுதியான வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து ஆர்வமாக வாக்களித்தனர். சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட பிற ஆவணங்களை காட்டி ஓட்டுப்போட்டனர். ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இந்த தேர்தலில் பகல் 12 மணி வரை கர்நாடக வடமேற்கு தொகுதியில் 24.09 சதவீதமும், தெற்கு பட்டதாரிகள் தொகுதியில் 21.17 சதவீதமும், கர்நாடக வடமேற்கு ஆசிரியர் தொகுதியில் 33.56 சதவீதமும், கர்நாடக மேற்கு ஆசிரியர் தொகுதியில் 38.86 சதவீதமும் ஓட்டுப்பதிவு நடைபெற்று இருந்தன. மாலை 4 மணி நிலவரப்படி அந்த 4 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 69.25 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

போலீஸ் பாதுகாப்பு

ஓட்டுப்பதிவு நிறைவடைந்ததும், பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டி சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது. அங்கு வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை 15-ந் தேதி (நாளை) நடக்கிறது. கர்நாடக தெற்கு பட்டதாரிகள் தொகுதி வாக்குகள் மைசூருவிலும், மற்ற 3 தொகுதிகளின் வாக்குகள் பெலகாவியிலும் எண்ணப்படுகின்றன.

மேலும் செய்திகள்