எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க விவகாரம்: அரசியலமைப்புக்கு முரணான முடிவு எடுக்கப்பட்டால் மட்டும் சுப்ரீம் கோர்ட்டு தலையிடும்- மகாராஷ்டிரா சபாநாயகர்
|எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் அரசியலமைப்புக்கு முரணான முடிவு எடுக்கப்பட்டால் மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு தலையிடும் என்று மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகர் கூறினார்.
தகுதிநீக்க விவகாரம்
சிவசேனாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து, இரு அணியினரும் ஒருவருக்கொருவர் தகுதிநீக்க மனுக்களை சபாநாயகரிடம் கொடுத்தனர். பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு தகுதிநீக்க மனுக்கள் மீது சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் சபாநாயகர் தகுதிநீக்க மனுக்கள் மீது முடிவு எடுப்பதில் கால தாமதம் செய்வதாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே அணி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சபாநாயகர் மனுக்கள் மீது முடிவு எடுக்க காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
இந்த விவகாரங்கள் தொடர்பாக நேற்று சபாநாயகர் ராகுல் நர்வேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மீறினால் தலையிடும்
எந்த ஒரு விவகாரத்திலும் எடுக்கப்படும் முடிவு அரசியலமைப்பிற்கு முரணானது அல்லது அது சட்டத்தை மீறினால் மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு தலையிடும். இல்லையெனில், மற்ற நிறுவனங்களின் செயல்பாட்டில் சுப்ரீம் கோர்ட்டு தலையிடாது.
சட்டமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறை ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று சமமான அமைப்புகளாகும். யாரும் மற்றவரை மேற்பார்வையிடுவதில்லை, அது அரசியலமைப்பு ஒழுக்கம் என்று அழைக்கப்படுகிறது.
அடிபணிய மாட்டேன்
தகுதி நீக்க விவகாரத்தில் சிலர் என் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். சட்டமன்றத்திற்கு வெளியே கூறப்படும் எந்த குற்றச்சாட்டுகளும் பெரிதாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று நான் பலமுறை கூறியுள்ளேன். நான் அதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை.
குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மற்றும் என் மீது அழுத்தத்தை அதிகரிக்க முயற்சிக்கும் நபர்களுக்கு நான் அடிபணிய மாட்டேன். அரசியல் சாசனம் பற்றிய அறிவு இல்லாதவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் அர்த்தமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.