பலாத்கார வழக்கில் எம்.எல்.ஏ. மகனை ஜாமீனில் விடுவித்த ஐகோர்ட்டு... உத்தரவை தள்ளி வைத்த சுப்ரீம் கோர்ட்டு
|சிறுமி பலாத்கார வழக்கில் எம்.எல்.ஏ. மகனை ராஜஸ்தான் ஐகோர்ட்டு ஜாமீனில் விடுவித்த நிலையில், 2 வாரத்தில் அவரை சரண் அடையும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஜோஹாரி லால் மீனா. இவருடைய மகன் தீபக் மீனா. இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச்சில் ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தில் மந்தவார் பகுதியில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. எப்.ஐ.ஆரும் பதிவானது. கும்பல் பலாத்காரம், குற்ற செயலை வீடியோ எடுத்து பரப்பி விடுவோம் என மிரட்டல், பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவாகின.
இதுபற்றிய புகாரில், மந்தவார் சாலையில் உள்ள மாவா பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குற்றவாளிகளில் ஒருவர், சிறுமியை மிரட்டி ரூ.15 லட்சம் பணம் மற்றும் நகைகளை பறித்துள்ளார். பணம், நகை காணாமல் போக, சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்த பின்னர் இந்த விசயம் வெளியே தெரிந்துள்ளது.
இந்த வழக்கில், ராஜஸ்தான் ஐகோர்ட்டின் ஒரு நபர் கொண்ட நீதிபதி தலைமையிலான விசாரணையின்போது, கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தீபக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வரும் ஜோஹாரி லால் மீனாவின் மகனான தீபக் மீனா, வழக்கின் மீது தாக்கம் ஏற்படுத்தி, விசாரணையை தாமதப்படுத்தவும், சாட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கவும், அவர்களுக்கு மிரட்டல் விடுக்கவும் முடியும். அல்லது குற்றவாளி கூறுவது போன்று அல்லது அவரை பாதுகாக்கும் வகையில் உதவ முடியும் என தெரிவித்து உள்ளது.
இதனை தொடர்ந்து, ராஜஸ்தான் ஐகோர்ட்டின் தீர்ப்பை ஒத்தி வைத்ததுடன், 2 வாரங்களில் குற்றவாளியை சரண் அடையும்படி உத்தரவிட்டு உள்ளது.