< Back
தேசிய செய்திகள்
கோலாரில் தொழில் பூங்கா அமையும் இடத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு
தேசிய செய்திகள்

கோலாரில் தொழில் பூங்கா அமையும் இடத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

தினத்தந்தி
|
7 Sep 2023 6:45 PM GMT

கோலார் தங்கவயலில் தொழில் பூங்கா அமையும் இடத்தில் ரூபகலா சசிதர் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.

கோலார் தங்கவயல்

தங்கச் சுரங்கம் மூடப்பட்டது

கோலார் தங்கவயலில் ஆங்கிலேயர் காலத்தில் உருவான தங்கச் சுரங்கம் திடீரென்று மூடப்பட்டது. இந்த தங்கச் சுரங்கம் மூடப்பட்டு 23 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.

இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் வேலை இழந்தனர். இதையடுத்து அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

மேலும் தங்கச் சுரங்க தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்ட வீடுகளும் இன்னும் நிரந்தரமாகவில்லை. இதையடுத்து அவர்கள் குடும்பத்துடன் தவித்து வருகின்றனர்.

தங்கச் சுரங்கம் இருந்தால் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு வேலை கிடைத்திருக்கும்.

ஆனால் தங்கச் சுரங்கம் மூடப்பட்டதால் தொழிலாளிகளின் பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக பெரும்பாலானவர்கள் பெங்களூருவை நோக்கி வேலை தேடி செல்கின்றனர்.

தொழில் பூங்கா

இந்தநிலையில் கோலார் தங்கவயலை சேர்ந்த மக்கள் உள்ளூரிலேயே வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்று தொகுதி எம்.எல்.ஏ. ரூபகலா சசிதருக்கு கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்ற அவர் கோலார் தங்கவயலில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார். ஏற்கனவே இதற்கு முன்பு பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோதே இந்த பேச்சு அடிப்பட்டது.

அதாவது முன்னாள் மந்திரியாக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர், பொறுப்பில் இருந்தபோது, இந்த தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று கூறப்பட்டது.

அதனை ரூபகலா சசிதர் எம்.எல்.ஏ. கருத்தில் கொண்டு, தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று கூறினார். அதன்படி காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சிக்கு வந்துள்ளது.

இதையடுத்து ரூபகலா சசிதர் எம்.எல்.ஏ. முதல்-மந்திரி சித்தராமையாவிடம் இதுகுறித்து கோரிக்கை வைத்தார்.

இடங்கள் ஆய்வு

இந்த கோரிக்கையை ஏற்ற அவர் நிலங்களை ஆய்வு செய்யும் படி உத்தரவிட்டார். அதன்படி பி.இ.எம்.எல். நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களில் 983 ஏக்கரை கையகப்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான ஆய்வு பணிகள் நேற்று நடந்தது. இதில் ரூபகலா சசிதர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அந்த இடங்களை ஆய்வு செய்தார்.

இவருடன் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் செல்வக்குமார், கோலார் கலெக்டர் அக்ரம் பாஷா ஆகியோர் இருந்தனர். அந்த இடங்களை ஆய்வு செய்த ரூபகலா சசிதர் விரைவில் தொழில் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்