நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் உத்தரபிரதேச எம்.எல்.ஏ. கைது: அமலாக்கத்துறை அதிரடி
|நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் உத்தரபிரதேச எம்.எல்.ஏ. அப்பாஸ் அன்சாரியை அமலாக்கத்துறை கைது செய்தனர்.
புதுடெல்லி,
உத்தரபிரதேசத்தில் பிரபல தாதாவாக இருந்து அரசியலில் ஈடுபட்டவர் முக்தார் அன்சாரி. 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ள இவருக்கு எதிராக சுமார் 50 குற்றவழக்குகள் உள்ளன. இதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
மேலும் அவரது மகனும், மாவ் தொகுதியின் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வுமான அப்பாஸ் அன்சாரி (வயது 30) மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.இந்த வழக்கில் அப்பாஸ் அன்சாரியிடம் பிரயாக்ராஜில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடந்து வந்தது.
விசாரணை முடிவில் நேற்று அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.முன்னதாக இந்த வழக்குகள் தொடர்பாக முக்தார் அன்சாரிக்கு சொந்தமான சுமார் ரூ.1½ கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை கடந்த மாதம் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ. ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.