எம்.எல்.ஏ. பங்கேற்ற நிகழ்ச்சியில் தொடர் மின்தடை
|கோலார் தங்கவயலில் எம்.எல்.ஏ. கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தொடர் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இது தொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோலார் தங்கவயல்
கோலார் தங்கவயல்
கோலார் மாவட்டம் மற்றும் கோலார் தங்கவயலில் தொகுதிக்குட்பட்ட சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து கோலார் மற்றும் கோலார் தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுத்ததன் பேரில் மின் வினியோகம் சீரானது.
இதற்கு பொதுமக்கள் மின் வாரியத்துறை அதிகாரிகளுக்கும், தொகுதி எம்.எல்.ஏ.விற்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் மீண்டும் கோலார் தங்கவயல் தொகுதிக்குட்பட்ட சில பகுதிகளில் மின்தடை ஏற்பட தொடங்கியுள்ளது.
குறிப்பாக கோலார் தங்கவயல் நகரசபைக்குட்பட்ட பகுதியில்தான் இந்த மின்தடை அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து தொகுதி மக்கள் பல முறை ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ.விடம் புகார் அளித்துவிட்டனர். அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால் மின்தடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியவில்லை.
20 முறை மின்தடை
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை கோலார் தங்கவயலில் 20 முறை மின்தடை ஏற்பட்டது. குறிப்பாக ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ. கலந்து கொண்ட கூட்டத்தில் 3 முறை மின்தடை ஏற்பட்டது.
அதாவது கோலார் தங்கவயல் ரோட்ஜர்ஸ்கேம் பகுதியை அடுத்த சூரப்பள்ளி கிராமத்தில் நகரசபை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீடு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் 50 தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீடுகள் வழக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலவச வீடுகளுக்கான சாவியை வழங்கினார்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இதையடுத்து எம்.எல்.ஏ. பேசும்போது, அடுத்தடுத்து 3 முறை மின்தடை ஏற்பட்டது. இதனால் ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ.வால் பேச முடியவில்லை. இருப்பினும் நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்துவைத்தார்.
அப்போது சிலர் ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ.வை சந்தித்து, சூரப்பள்ளி கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எனவே மின்வினியோகத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதை கேட்ட ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.