< Back
தேசிய செய்திகள்
மிசோரம் ரெயில்வே பால விபத்து: உயர்மட்ட விசாரணைக்குழு அமைப்பு
தேசிய செய்திகள்

மிசோரம் ரெயில்வே பால விபத்து: உயர்மட்ட விசாரணைக்குழு அமைப்பு

தினத்தந்தி
|
26 Aug 2023 6:21 AM IST

விபத்து தொடர்பாக விசாரிப்பதற்காக 4 பேரை கொண்ட உயர்மட்ட விசாரணை குழுவை மத்திய ரெயில்வே அமைச்சகம் அமைத்துள்ளது.

அய்ஸ்வால்,

மிசோரம் மாநிலத்தின் தலைநகர் அய்ஸ்வால் அருகே உள்ள சாய்ராங் பகுதியில் கட்டப்பட்டு வந்த ரெயில்வே பாலம் கடந்த புதன் கிழமை திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 23 தொழிலாளர்கள் பலியாகினர். இடிபாடுகளில் இருந்து இதுவரை 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. படுகாயம் அடைந்த 3 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக விசாரிப்பதற்காக 4 பேரை கொண்ட உயர்மட்ட விசாரணை குழுவை மத்திய ரெயில்வே அமைச்சகம் அமைத்துள்ளது. ரெயில்வே அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான ஆர்.டி.எஸ்.ஓ.வின் தலைமை திட்ட இயக்குனர் பிபி அஸ்வதி, ஐஐடி டெல்லியின் சிவில் என்ஜினீயரிங் பேராசிரியர் திப்தி ரஞ்சன் சாஹூ, இந்திய ரெயில்வே சிவில் என்ஜினீயரிங் நிறுவனத்தின் அதிகாரி ஷரத் குமார் அகர்வால் மற்றும் வடகிழக்கு ரெயில்வேயின் தலைமை பால என்ஜினீயர் சந்தீப் சர்மா ஆகியோர் இந்த உயர்மட்ட விசாரணை குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணைக்குழு ஒரு மாதத்துக்குள் தனது இறுதி அறிக்கையை சமர்பிக்கும் என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்