மிசோரம் சட்டசபை தேர்தல்: பெரிய வெற்றியை பெறுவேன்; வாக்கை செலுத்திய பின் முதல்-மந்திரி பேட்டி
|என்னுடைய தொகுதியில் மிக பெரிய வெற்றியை பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என மிசோரம் முதல்-மந்திரி ஜொராம்தங்கா கூறியுள்ளார்.
அய்ஸ்வால்,
40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில், ஆளும் மிசோ தேசிய முன்னணி, சோரம் மக்களின் இயக்கம், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி என பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என 170 பேர் போட்டியிடுகின்றனர்.
தேர்தலையொட்டி, வாக்காளர்கள் காலையிலேயே வாக்கு சாவடிகளுக்கு வந்து, வரிசையில் காத்திருந்து தங்களுடைய வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இதனையொட்டி, மிசோரமில் காலை 7 மணியளவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
வாக்களிக்க வந்த ஆளும் மிசோ தேசிய முன்னணி தலைவர் மற்றும் முதல்-மந்திரியான ஜொராம்தங்கா செய்தியாளர்களிடம் கூறும்போது, இது தொங்கு சட்டசபையாக இருக்காது. மிசோ தேசிய முன்னணியின் அரசாக அமையும். அதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.
இந்த தேர்தலில் வாக்களிக்க சென்ற ஆளும் மிசோ தேசிய முன்னணி தலைவர் மற்றும் முதல்-மந்திரியான ஜொராம்தங்கா, அவருடைய வாக்கை பதிவு செய்ய முடியவில்லை.
இதுபற்றி அவர் கூறும்போது, வாக்கு இயந்திரம் வேலை செய்யவில்லை. வாக்களிப்பதற்காக சென்றேன். ஆனால், இயந்திரம் வேலை செய்ய முடியாத நிலையில், எனது தொகுதிக்கு சென்று காலை கூட்டம் நிறைவடைந்த பின்பு வாக்களிப்பேன் என அவர்களிடம் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார். ஆளும் கட்சியை சேர்ந்த தலைவர் வாக்களிக்க முடியாத சூழலால், சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
இதன்பின்னர், அய்ஸ்வால் வடக்கு-2 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்கு மையம் ஒன்றில் அவர் வாக்கை செலுத்தினார். அதன்பின் வெளியே வந்து செய்தியாளர்களிடம் கூறும்போது, என்னுடைய வாக்கை பதிவு செய்து விட்டேன். எனது தொகுதியின் பாதி பகுதிகளுக்கு சென்று வந்து விட்டேன்.
அரசை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என்னுடைய தொகுதியில் மிக பெரிய வெற்றியை பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார். முதலில், வாக்களிக்க சென்றபோது வாக்கு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் அவரால் வாக்கை செலுத்த முடியவில்லை.