பாரதீய ஜனதா கட்சி தலைவருடன் மிதாலி ராஜ் திடீர் சந்திப்பு
|மிதாலி ராஜ், நட்டாவை சந்தித்து இருப்பதால் அவர் பாரதீய ஜனதா கட்சியில் இணையலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச பெண்கள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்பது உள்பட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரும், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான 39 வயது மிதாலி ராஜ் கடந்த ஜூன் 8-ந் தேதி அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் அவர் அரசியலில் குதிக்க இருப்பதாக பரபரப்பு கிளம்பி இருக்கிறது. தெலுங்கானாவில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார். அவரை கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் சந்தித்து பேசினார். அடுத்த ஆண்டு இறுதியில் தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியை பலப்படுத்தும் பணியை நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர். அதற்காக பிரபலங்களை இழுத்து வருகிறார்கள். இத்தகைய சூழலில் மிதாலி ராஜ், நட்டாவை சந்தித்து இருப்பதால் அவர் பாரதீய ஜனதா கட்சியில் இணையலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று மிதாலி ராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.