காதலர்கள் என தவறுதலாக நினைத்து சகோதர, சகோதரியை அடித்து, உதைத்த அவலம்
|மத்திய பிரதேசத்தில் காதலர்கள் என தவறுதலாக நினைத்து சகோதர, சகோதரியை உள்ளூர்வாசிகள் அடித்து, உதைத்த அவலம் நடந்துள்ளது.
போபால்,
மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் சடாய் சாலையில் அமைந்துள்ள கோவில் அருகே தெருவோர கடையில் அதுல் சவுத்ரி மற்றும் அவருடைய சகோதரி இருவரும் நின்றுள்ளனர்.
இந்நிலையில், அந்த பகுதிக்கு வந்த உள்ளூர்வாசிகள் சிலர் அவர்கள் இருவரையும் அடித்து, தாக்கியுள்ளனர். சகோதரர், சகோதரிகளுக்கான ரக்சா பந்தன் பண்டிகையின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் இரண்டு பேரும் காதலர்கள் என அந்த பகுதி மக்கள் தவறுதலாக நினைத்து, இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.
இதன்பின்னர், பாதிக்கப்பட்ட அவர்கள் நேராக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இதுபற்றிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலானது. இதில் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் பஜ்ரங் தளம் என்ற இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. எனினும், இதனை போலீஸ் சூப்பிரெண்டு மறுத்துள்ளார். புகாரிலும் அது பற்றி குறிப்பிடவில்லை என கூறிய அவர், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.