வீட்டில் இருந்து மாயமான பேக்கரி கடை உரிமையாளர் 7ஆண்டுகளுக்கு பிறகு உயிருடன் மீட்பு
|வீட்டில் இருந்து மாயமான பேக்கரி கடை உரிமையாளரை 7 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் உயிருடன் மீட்டுள்ளனர்.
குடகு:
வீட்டில் இருந்து மாயமான பேக்கரி கடை உரிமையாளரை 7 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் உயிருடன் மீட்டுள்ளனர்.
பேக்கரி கடை உரிமையாளர்
குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகா முள்ளுசோகே கிராமத்தில் வசித்து வந்தவர் கிரீஷ் என்கிற சண்முகய்யா(வயது 43). இவர் அப்பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு இவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். வீட்டில் அனைவருடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்த கிரீஷ் திடீரென மாயமானது அவரது குடும்பத்தினரை நிலைகுலைய செய்தது.
கிரீஷ், அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மேலும் சொந்தமாக பேக்கரி கடை வைத்து நடத்தி வந்தார். இதற்காக பலரிடம் அவர் கடன் வாங்கி இருந்தார். கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுக்கவே அவர் தனது மனைவி மற்றும் மகனை தவிக்க விட்டுவிட்டு ஓடிவிட்டதாக கூறப்பட்டது.
விஜயாப்புராவில் பதுங்கி இருந்தார்
இதுபற்றி கிரீசின் மனைவி குஷால்நகர் போலீசில் புகார் செய்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரீசை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கிரீஷ் கொலை செய்யப்பட்டு விட்டதாகவும், அதற்கு அவர் வாடகைக்கு வசித்து வரும் வீட்டு உரிமையாளர் சிவக்குமார் தான் காரணம் என்றும் வதந்தி பரவியது. இதனால் சிவக்குமாரின் வீட்டில் பிரச்சினையும் ஏற்பட்டது. சிவக்குமார் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இந்த நிலையில் போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் கிரீஷ் உயிரோடு இருப்பதும், அவர் விஜயாப்புராவில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது.
7 ஆண்டுகளுக்கு பிறகு...
அதையடுத்து போலீசார் விஜயாப்புராவுக்கு சென்று கிரீசை மீட்டனர். இதனால் அவரது மனைவி மகிழ்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். வீட்டில் இருந்து மாயமான பேக்கரி கடை உரிமையாளர் 7 ஆண்டுகளுக்கு பிறகு உயிரோடு மீட்கப்பட்டு இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.