< Back
தேசிய செய்திகள்
சந்திரயான்-3, ஜி-20, காஷ்மீர், ஷாருக்கான் குறித்து சுவாரஸ்யமாக பதிலளித்த உலக அழகி
தேசிய செய்திகள்

சந்திரயான்-3, ஜி-20, காஷ்மீர், ஷாருக்கான் குறித்து சுவாரஸ்யமாக பதிலளித்த உலக அழகி

தினத்தந்தி
|
29 Aug 2023 6:00 PM IST

சந்திரயான்-3, ஜி-20, காஷ்மீர், ஷாருக்கான் குறித்த கேள்விகளுக்கு உலக அழகி கரோலினா பிலாவ்ஸ்கா சுவாரஸ்யமாக பதிலளித்தார்.

புதுடெல்லி,

2023ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. வரும் டிசம்பர் மாதம் 8-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் உலக அழகி போட்டி நடக்க இருக்கிறது. ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதனிடையே, போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா 2021-ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார். அவர் அமெரிக்கா, இந்தோனேஷியா, மெக்சிகோ, அயர்லாந்து போன்ற நாடுகளை சேர்ந்த போட்டியாளர்களை வீழ்த்தி உலக அழகி பட்டத்தை வென்றார்.

இந்த சூழலில் உலக அழகி கரோலினா ஒருநாள் பயணமாக நேற்று காஷ்மீர் சென்றார். அவருடன் மிஸ் இந்தியா அழகி சினி ஷெட்டி, மிஸ் வெல்ட் கரீபியன் அழகி எமி பெனா ஆகியோரும் காஷ்மீர் சென்றனர். ஸ்ரீநகர் சென்ற அவர்கள் அனைவரும் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர், அவர்கள் ஜம்மு-காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்காவையும் சந்தித்தனர். மேலும், காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற கரோலினா உள்பட அழகிகள் அங்குள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். 2023ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து டெல்லி திரும்பியநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய உலக அழகி கரோலினா பிலாவ்ஸ்கா, "இந்தியாவின் இந்த அழகிய பகுதியை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் காஷ்மீர் குறித்து பேசினோம். மிகவும் அழகிய இயற்கை காட்சிகள் இருக்கும் என எனக்கு தெரியும். ஆனால், நான் இன்று பார்த்தது என் மனதை திகைப்படைய செய்துவிட்டது. அனைவரும் எங்களை அன்புடன் வரவேற்றனர். ஆகையால்,140 நாடுகளையும், என் நண்பர்கள், குடும்பத்தினரையும் இந்தியாவிற்கு அழைத்துவந்து, காஷ்மீரை காண்பிக்க நான் மிகுந்த ஆவலுடன் உள்ளேன்.

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் நம்பமுடியாத ஒரு சாதனை. இதற்காக இந்தியா மிகவும் பெருமைப்பட வேண்டும். இதேபோல், இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெற உள்ள ஜி 20 உச்சி மாநாடு, ஒரு அற்புதமான வாய்ப்பு. உலகத் தலைவர்கள் இங்கு வந்து, காலநிலை மாற்றம் உள்பட நமது பூமியை பாதிக்கும் அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க இருக்கிறார்கள். இதன்மூலம், நாம் சிறப்பாக என்ன செய்ய முடியும் என்பதை முடிவு செய்யலாம்.

பாலிவுட் படங்களில் பணியாற்ற விரும்புகிறேன். ஷாருக்கானின் படத்தில் நடிப்பது மிகவும் அருமையாக இருக்கும். இயக்குநர் சஜித் நதியத்வாலாவைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. மேலும், அரண்மனைகள், இளவரசிகள் என அவர் தயாரிக்கும் திரைப்படங்களில் சஞ்சய் லீலா பன்சாலி உடன் பணியாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. கற்றுக்கொள்ளவும், பாலிவுட் சந்தை குறித்து தெரிந்து கொள்ளவும் முடிந்தால் அது எனக்கு ஒரு பெருமையாக இருக்கும்" என்று உலக அழகி கரோலினா பிலாவ்ஸ்கா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்