டெல்லியில் அவலம்: 13 வயது மாணவிக்கு அடி, உதை; வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சக பள்ளி மாணவிகள்
|டெல்லியில் 13 வயது மாணவியை மூத்த மாணவிகள் அடித்து, உதைத்து வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவிட்ட பின்னரே போலீசுக்கு தகவல் தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டின் தலைநகர் டெல்லியில் 13 வயது மாணவி ஒருவரை அதே பள்ளியில் படித்து வரும் மூத்த மாணவிகள் 5 பேர் அடித்து, உதைத்து அதனை படம் பிடித்து, வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவிட்ட பின்னரே போலீசுக்கு தகவல் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி டெல்லி (வடக்கு) துணை காவல் ஆணையாளர் சாகர் சிங் கால்சி கூறும்போது, மால்கா கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் அலாமுதீன். இவரது 13 வயது மகள் பள்ளி கூடமொன்றில் படித்து வருகிறார். அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் சக மாணவிகள் சிலர் அந்த மாணவியை அடித்து தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், அலாமுதீன் தகவல் தெரிவிக்காமல், இந்து ராவ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனது மகளை கொண்டு சென்றுள்ளார். இந்த தாக்குதல் வீடியோவானது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்தே மாணவியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர் என காவல் ஆணையாளர் கூறியுள்ளார்.
அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பற்றி சிறுமியும் எழுத்துப்பூர்வ புகார் அளித்து உள்ளார். தாக்குதல் நடத்திய மாணவிகள் 5 பேரையும் அடையாளம் காட்ட முடியும் என உறுதியும் அளித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து சிறுவர் நீதி சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. எனினும், சிறுமியை சக பள்ளி மாணவிகள் சேர்ந்து தாக்கியதற்கான காரணம் எதனையும் போலீசார் வெளியிடவில்லை.