< Back
தேசிய செய்திகள்
நடிகை சோனாலி போகத் மரண வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை
தேசிய செய்திகள்

நடிகை சோனாலி போகத் மரண வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை

தினத்தந்தி
|
12 Sept 2022 5:39 PM IST

சோனாலி போகத் மரண வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

அரியானாவை சேர்ந்த நடிகையும், பா.ஜனதா பிரமுகருமான சோனாலி போகத் கோவாவில் உள்ள தனியார் விடுதியில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலில் காயங்களுக்கான அடையாளங்கள் இருப்பதாகவும்,அவர் அதிகளவு போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

சோனாலிக்கு அவரது உதவியாளர் சுதீர் சங்வான் போதை மருந்து கலந்த உணவை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டார் என்றும், இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளது என்றும் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக விசாரணையை நடத்திய போலீசார், அவரது உதவியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அதன் பின்னர் உணவு விடுதி உரிமையாளர் மற்றும் சந்தேகத்திற்குரிய வகையிலான போதைப் பொருள் கடத்தல்காரர் உள்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

சோனாலி போகத் மரண வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் அவரது குடும்பத்தினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடும்படி கோவா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அரியானா முதல் மந்திரி மனோகர்லால் கட்டார் கூறியிருந்தார்.

இதற்கிடையே சோனாலியின் மரணம் பற்றிய ரகசிய அறிக்கை அரியானா காவல்துறை தலைமை இயக்குநருக்கு அனுப்பப்பட்டது. கோவா டிஜிபி ஜஸ்பால் சிங், இந்த வழக்கு தொடர்பாக கோவா முதல் மந்திரி சாவந்திடம் ஐந்து பக்க அறிக்கையை அளித்திருந்தார்.

இந்த நிலையில், சோனாலி போகத் மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்