< Back
தேசிய செய்திகள்
ஒடிசா விமான நிலையங்களில் கட்டண உயர்வை கண்காணிக்க மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தல்
தேசிய செய்திகள்

ஒடிசா விமான நிலையங்களில் கட்டண உயர்வை கண்காணிக்க மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
3 Jun 2023 7:54 PM IST

ஒடிசா விமான நிலையங்களில் கட்டண உயர்வை கண்காணிக்கும்படி விமான நிறுவனங்களுக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

ஒடிசாவில் ரெயில் விபத்து எதிரொலியாக, மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை முன்னிட்டு ஒடிசாவை சுற்றியுள்ள பகுதிகளுக்கான பல்வேறு ரெயில்களை தென்கிழக்கு ரெயில்வே இன்று ரத்து செய்து உள்ளது.

இதனால், பலரும் பஸ்களில் புறப்பட தயாரானார்கள். ஆனால், நிலைமையை பயன்படுத்தி, புக்கிங் ஏஜெண்டுகள் பஸ் கட்டண தொகையை திடீரென 2 மடங்கு, 3 மடங்கு என உயர்த்தி விட்டனர்.

ஒடிசாவின் பத்ரக், கட்டாக் மற்றும் பூரி நகரங்களுக்கு செல்ல ஏ.சி. வசதி இல்லாத பஸ்களில் முறையே ரூ.400, ரூ.600 மற்றும் ரூ.800 என வசூலிக்கப்படும். ஆனால், இன்று அந்த கட்டணம் ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை உயர்ந்து விட்டது. சில ஏஜெண்டுகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,500 வரை கேட்கின்றனர்.

ஒடிசா ரெயில் விபத்து எதிரொலியாக அதனை பயன்படுத்தி, பஸ் கட்டண தொகையை உயர்த்தி ஏஜெண்டுகள் சிலர் லாபம் பார்க்கும் செயலுக்கு பயணிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதனால் ஒடிசா அரசு தங்களை பாதுகாக்க வேண்டும் என பயணிகள் பலர் வேண்டுகோளாக கேட்டு உள்ளனர்.

இந்த நிலையில், ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் இருந்து செல்ல கூடிய அல்லது வர கூடிய விமானங்களுக்கான கட்டணங்களில் திடீர் உயர்வு ஏதேனும் காணப்பட்டால் அவற்றை கண்காணிக்கும்படி விமான நிறுவனங்களுக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

பிற விமான நிலையங்களிலும் இந்த நிலைமையை கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளது. இதேபோன்று, ரெயில் விபத்து நிகழ்வை முன்னிட்டு விமான ரத்து மற்றும் மறு காலஅட்டவணையை தேர்ந்தெடுப்பதற்கு அபராத தொகை எதுவும் விதிக்காமல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தலை வழங்கி உள்ளது.

ஒடிசாவில் நேற்று இரவு பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில் 288 பேர் பலியாகி உள்ளனர்.

விபத்தில் காயமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு நகர மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்