மக்கள் கஷ்டப்படும்போது ஓய்வு எடுக்கும் மந்திரிகள்- காங்கிரஸ் விமர்சனம்
|மக்கள் கஷ்டப்படும்போது மந்திரிகள் ஓய்வு எடுப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-கொரோனா வைரஸ் பரவிய நேரத்தில் சில மந்திரிகள் நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்தனர். இப்போது பெங்களூருவே நீச்சல் குளமாக மாறிவிட்டது. மக்கள் தான் நீச்சல் அடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீச்சல் அடித்த மந்திரியை காணவில்லை. மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பா.ஜனதா மாநாடு நடத்துகிறது. பெங்களூருவில் வெள்ளம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகிறது. ஆனால் போலீஸ் மந்திரி மட்டும் எங்கே சென்றார் என்று தெரியவில்லை.
அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடவில்லை. பெங்களூருவில் இல்லை. விதான சவுதாவிலும் இல்லை. சொந்த தொகுதியில் முடங்கியுள்ள அவர் மந்திரியாக மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்வது எப்போது?. பெங்களூரு மக்கள் கொடுத்த ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து வரும் மந்திரி ஆர்.அசோக், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடவில்லை. மக்கள் கஷ்டப்படும்போது, பா.ஜனதாவினர் ஓய்வு எடுக்கிறார்கள். மழை வெள்ள பாதிப்புகள் முடிவடைந்த பிறகு ஹிஜாப், ஹலால் என்று சுறுசுறுப்பாக கிளம்பி விடுவார்கள்.
இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.