கர்நாடக காங்கிரசில் மீண்டும் உட்கட்சி பூசல்: நியமன எம்.எல்.சி.க்கள் பட்டியலுக்கு மந்திரிகள் கடும் எதிர்ப்பு
|நியமன எம்.எல்.சி.க்கள் பட்டியலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு மந்திரிகள் கடிதம் எழுதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சி பொறுப்பேற்ற 2 மாதத்தில் கர்நாடக காங்கிரசில் கோஷ்டி பூசல் வெடித்தது. மந்திரிகள் தங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பதில்லை என எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர். சில எம்.எல்.ஏ.க்கள் பகிரங்கமாக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா, எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினார். மேலும் மாவட்டம்தோறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை சித்தராமையா கூட்டி வருகிறார். இந்த பிரச்சினை ஓய்ந்திருந்த நிலையில் தற்போது நியமன எம்.எல்.சி.க்கள் விவகாரத்தில் மீண்டும் கர்நாடக காங்கிரசில் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது.
அதாவது, கர்நாடக மேல்-சபையில் 3 நியமன எம்.எல்.சி.க்கள் பதவிகள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களுக்கு கர்நாடக அரசு எம்.ஆர்.சீதாராம், உமாஸ்ரீ, சுதாம்தாஸ் ஆகியோரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. இதில் சுதாம்தாஸ் அமலாக்கத்துறையில் அதிகாரியாக பணியாற்றி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் ஓய்வு பெற்று காங்கிரசில் சேர்ந்தார். அவருக்கு எம்.எல்.சி. பதவி வழங்குவதற்கு மந்திரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதாவது மந்திரிகள் கே.எச்.முனியப்பா, எச்.சி.மகாதேவப்பா, பரமேஸ்வர், ஆர்.பி.திம்மாபூர் உள்ளிட்ட சில மந்திரிகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், நியமன எம்.எல்.சி.க்கள் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள எம்.ஆர்.சீதாராம், சுதாம்தாஸ் ஆகியோரின் பெயர்களை தேர்வு செய்தது சரியல்ல என்றும், சுதாம்தாஸ் அமலாக்கத்துறை அதிகாரி பணியில் இருந்து ஓய்வு பெற்று 6 மாதங்களுக்கு முன்பு தான் கட்சியில் சேர்ந்தார், அவருக்கு இவ்வளவு சீக்கிரமாக பதவி வழங்குவது சரியல்ல என்றும் தங்களின் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். மேலும் எம்.ஆர்.சீதாராம் மீது நிதி முறைகேடு தொடர்பான வழக்கு உள்ளதால் அவருக்கு எம்.எல்.சி. பதவி வழங்குவது சரியல்ல என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து உணவுத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "நியமன எம்.எல்.சி.க்கள் தேர்வு குறித்து எங்களிடம் கருத்து கேட்கவில்லை. நாங்கள் கட்சி மேலிடத்திற்கு கடிதம் எழுதி இருப்பது உண்மை தான். நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சுதாம்தாஸ் அமலாக்கத்துறை அதிகாரி பணியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் சேர்ந்தார். அவருக்கு பதவி வழங்குவதை நாங்கள் எதிர்க்கிறோம்" என்றார்.