சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு வழக்கு: 5-ந்தேதி விசாரணை
|வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
புதுடெல்லி,
தற்போதைய தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த 2006-ம் ஆண்டு அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீதும், அவருடைய மனைவி மணிமேகலை மீதும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசுவையும், அவருடைய மனைவியையும் கீழ் கோர்ட்டு விடுவித்தது.
இதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு, தானாக முன்வந்து, வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பான விசாரணை பிப்ரவரி 5-ந்தேதி தொடங்கி நாள்தோறும் நடைபெறும் என்று அறிவித்தது.
இந்த விசாரணைக்கு இடைக்கால தடைக்கோரி, தங்கம் தென்னரசு, அவருடைய மனைவி மணிமேகலை ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ரிட் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிரசாந்த் குமார் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. இதே விவகாரம் தொடர்புடைய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் மனுவை 5-ந்தேதி விசாரிப்பதால், இந்த மனுவையும் நினைத்து அன்றைய தேதியில் விசாரிக்க வேண்டும் என மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார்.
இதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு நிதிபதிகள், தங்கம் தென்னரசின் ரிட் மனுவை, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் ரிட் மனுவுடன் இணைத்து 5-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனர்.