என்ஜினீயர்கள், அரசு அதிகாரிகளை கடிந்து கொண்ட மந்திரி சோமண்ணா
|இலவச வீடுகள் கட்டி கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால், என்ஜினீயர்கள் மற்றும் அதிகாரிகளை மந்திரி சோமண்ணா கடிந்து கொண்டார். பின்னர் துரிதமாக வீடுகளை கட்டி கொடுக்கும்படி உத்தரவிட்டார்.
சிக்கமகளூரு:-
இலவச வீடுகள்
சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் வீட்டு வசதித்துறை சார்பில் இலவச வீட்டு மனை மற்றும் புதிய வீடுகள் கட்டுமானப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா மற்றும் தொகுதி எம்.எல்.ஏ. சி.டி.ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது வி சோமண்ணா, இலவச வீடுகள் கட்டுமானப்பணிகள் குறித்து என்ஜினீயர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு என்ஜினீயர்களிடம் முறையான பதில்கள் இல்லை. இதையடுத்து அவர்களை கடிந்து கொண்ட சோமண்ணா, 1,500 வீடுகள் கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்கியிருக்கிறது. ஆனால் இதுவரை ஒரு வீடு கூட கட்டவில்லை. ஏன் இந்த தாமதம். அரசு அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை என்று கூறி கேள்வி எழுப்பினார்.
25 சதவீதம் முடிந்தது
அப்போது சி.டி.ரவி எம்.எல்.ஏ. குறுக்கிட்டு சிக்கமகளூரு தொழிலாளிகள் தரப்பில் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 25 சதவீதம் வீடுகள் கட்டும் பணிகள் முடிவடைந்துவிட்டது. ஆனால் பெங்களூரு கூலி தொழிலாளிகள் பணிகள்தான் தாமதம் ஏற்படுகிறது. அவர்கள் வந்தால் பணிகளை துரிதமாக முடித்துவிடலாம் என்று கூறினார்.
இதையடுத்து மந்திரி சோமண்ணா, என்ஜினீயர்களை அழைத்து, நிதிப்பற்றாக்குறை இல்லை. வீடுகள் கட்டுவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆனால் நீங்கள் பணி செய்யாமல், ஊதியத்தை மட்டும் வாங்கி கொண்டு, சுற்றி வருகின்றனர். இனி யாரும் பணியில் அலட்சியமாக இருக்க கூடாது. உடனே அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை
இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சிருங்கேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேகவுடா கூறியதாவது:-தாலுகாவில் இலவச வீடுகள் கட்டிக்கொடுக்க வனத்துறைக்கு சொந்தமான மரங்களை அகற்றுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. உடனே அதிகாரிகள் மரத்தை அகற்றிவிட்டு பணிகளை தொடங்கவேண்டும். அதேபோல குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகள் கட்டி தருவதாக, ஏழை, எளிய மக்களின் வீடுகளை இடித்துவிட்டு, புதிய வீடுகள் கட்டி கொடுக்கவில்ைல. இதனால் பலர் வீடு இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த பணிகளை உடனே முடிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.