போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மந்திரி செலுவராயசாமி பேச்சுவார்த்தை
|மண்டியாவில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மந்திரி செலுவராயசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யும் பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்துள்ளார்.
மண்டியா:-
விவசாயிகள் போராட்டம்
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் உள்ள அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. மேலும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்பேரில் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதற்கு விவசாயிகள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் மண்டியாவில் விவசாயிகள் தொடர்ந்து தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மந்திரி பேச்சுவார்த்தை
இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியா டவுனில் விசுவேஸ்வரய்யா சிலை முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று மண்டியா மாவட்ட பொறுப்பு மந்திரியும், விவசாயத்துறை மந்திரியுமான செலுவராயசாமி, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர், காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் நலன் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் அரசியல் செய்யும் பேச்சுக்கே இடமில்லை. கர்நாடக விவசாயிகளின் நலனே முக்கியம். காவிரியில் இருந்து தினமும் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. நமது நிலையை எடுத்து கூறிய பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீரை குறைத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி திறக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் நமது வாதத்தை எடுத்து வைக்க வக்கீல்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் காவிரி விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
விவசாயிகளின் நலனை பாதுகாக்க மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அனைத்துக்கட்சி பிரதிநிதிகளையும் டெல்லி அழைத்து செல்ல முடிவு செய்துள்ளோம். பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். ஆனால் இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை. நேரம் ஒதுக்கிய பிறகு அனைத்துக்கட்சி பிரதிநிதிகளை டெல்லி அழைத்து செல்வோம்.
அரசியல் செய்யக்கூடாது
மாநிலத்தில் உள்ள 28 எம்.பி.க்களும், ராஜ்யசபா உறுப்பினர்களும் காவிரி விவகாரத்தில் ஒன்றிணைந்து போராட வேண்டும். விவசாயிகள் தங்களின் நியாயமான கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. நாங்களும் காவிரி விவகாரத்தில் போராட்டம் நடத்தினோம். ஆனால் இதில் அரசியல் செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார். அவருடன் கலெக்டா் குமார், மண்டியா எம்.எல்.ஏ. ரவிக்குமார் ஆகியோர் இருந்தனர்.