< Back
தேசிய செய்திகள்
ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கணவருடன் பங்கேற்ற மந்திரி ரோஜா
தேசிய செய்திகள்

ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கணவருடன் பங்கேற்ற மந்திரி ரோஜா

தினத்தந்தி
|
9 April 2024 8:12 AM IST

முஸ்லிம் மக்கள் அனைவரும் ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று மந்திரி ரோஜா கூறினார்.

திருப்பதி,

திருப்பதி மாவட்டம் புத்தூர் மண்டலம் வேப்பகுண்டா அருகில் உள்ள ஒரு அரங்கில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மந்திரி ஆர்.கே.ரோஜா, அவரின் கணவரும் சினிமா இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

அதன்பிறகு மந்திரி ஆர்.கே.ரோஜா பேசியதாவது:-

புத்தூர் நகரில் ரூ.3 கோடியில் பிரமாண்டமான பள்ளி வாசல் மற்றும் தர்கா புதுப்பிக்கப்பட்டுள்ளன. நகரி தொகுதியில் பள்ளிவாசல் மேம்பாட்டுக்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான், மந்திரியானதும் தொகுதியில் அனைத்து நலத்திட்டங்களையும் பாரபட்சமின்றி செய்து வருகிறேன். புத்தூரில் முஸ்லிம் மக்கள் அனைவரும் ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். அல்லாஹ்வின் அருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்.

ஜெகன்மோகன்ரெட்டி மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும். நான் மீண்டும் நகரி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக வேண்டும். ரெட்டப்பா மீண்டும் சித்தூர் எம்.பி.யாக வேண்டும், என முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. முஸ்லிம் மக்கள் என் மீது இவ்வளவு பாசம் காட்டுவது விவரிக்க முடியாத உணர்வு. முஸ்லிம் மக்களுக்கு முதல்-மந்திரி ஜெகன்மோகன்ரெட்டி செய்த சேவைகளை எந்தத் தலைவரும் செய்ததில்லை. அவரின் ஆட்சி மீண்டும் தொடர வேண்டும். இவ்வாறு மந்திரி ஆர்.கே.ரோஜா பேசினார்.

நிகழ்ச்சியில் சித்தூர் எம்.பி. ரெட்டப்பா மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்