மண்டியா மாவட்ட பொறுப்பு மந்திரியாக ஆர்.அசோக் நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு
|மண்டியா மாவட்ட பொறுப்பு மந்திரியாக வருவாய்துறை மந்திரி ஆர்.அசோக்கை நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘‘கோ பேக்’’ என்ற போஸ்டர் ஒட்டி பா.ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மண்டியா:
மண்டியா மாவட்ட பொறுப்பு மந்திரியாக வருவாய்துறை மந்திரி ஆர்.அசோக்கை நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ''கோ பேக்'' என்ற போஸ்டர் ஒட்டி பா.ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய பொறுப்பு மந்திரி
மண்டியா மாவட்ட பொறுப்பு மந்திரியாக பா.ஜனதாவை சேர்ந்த கோபாலய்யா உள்ளார். மண்டியாவில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் கோபாலய்யாவை மாற்றிவிட்டு, புதிய பொறுப்பு மந்திரியாக அசோக்கை நியமிக்க மாநில அரசு முடிவு செய்திருந்தது. அதாவது வருகிற சட்டசபை தேர்தலில் மண்டியாவில் பா.ஜனதா அதிக இடங்களை பிடிக்கவேண்டும்.
இதற்கு அசோக் பொறுப்பு மந்திரியாக நியமிக்கப்பட்டால், தேர்தல் பிரசாரம் செய்து, பா.ஜனதாவிற்கு கூடுதல் இடம் கிடைக்க வழிவகை செய்வார் என்று கட்சி தலைமை நினைத்தது. அதன்படி அசோக்கை மாநில அரசு பொறுப்பு மந்திரியாக நியமனம் செய்தது.
கோ பேக் போஸ்டர்
இந்நிலையில் நேற்று மண்டியாவில் நடந்த குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக மந்திரி அசோக், சென்றிருந்தார். அப்போது அங்கு சாலையோர சுவர்களில் கோ பேக் அசோக் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. மேலும் பா.ஜனதாவை கட்சியை சேர்ந்த சிலரும் அவர் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள கூடாது. மாவட்ட பொறுப்பு மந்திரி பதவி வழங்க கூடாது என்று போர்கொடி உயர்த்தினர்.
இது குறித்து பா.ஜனதாவை சேர்ந்த மாவட்ட தலைவரான சித்தராமையா என்பவர் கூறும்போது:-
மண்டியா மாவட்டத்தில் எந்த கோஷ்டிபூசலும் இல்லை. பா.ஜனதாவிற்கு மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளது. மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரை மாற்றிவிட்டு அசோக்கை பொறுப்பு மந்திரியாக நியமித்திருப்பது ஏற்புடையது அல்ல. எனவே கட்சி தலைமை இந்த முடிவை திரும்ப பெறவேண்டும் என்று கூறினார்.
கட்சி தலைமை முடிவு
இதற்கு பதில் அளித்த மந்திரி அசோக் கூறும்போது:- கட்சி தலைமை என்னை மாவட்ட பொறுப்பு மந்திரியாக நியமனம் செய்துள்ளது. ஏனென்றால் தேர்தல் நெருங்குகிறது. கட்சி பணியாற்றவேண்டியுள்ளது. மேலும் மண்டியா முழுவதும் பா.ஜனதா வெற்றி பெறவேண்டும். அந்த முனைப்புடன் கட்சி செயல்பட்டு வருகிறது. கடந்த தேர்தலில் சிறப்பாக பணியாற்றினேன். அதை வைத்து அரசு இந்த பொறுப்பை வழங்கியிருக்கிறது.
இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டியதாக கூறப்படுகிறது. இதுவரை நான் அந்த போஸ்டரை பார்க்கவில்லை. எதிர்ப்பு என்பது அனைத்து இடங்களிலும் இருக்கதான் செய்யும். நாம் மக்கள் பணி மற்றும் கட்சி பணியாற்றவேண்டும். கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கு நான் உடன் படுவேன். இது எனது எதிராளிகளின் திட்டமிட்ட செயல். இதை நான் கண்டு கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.