3 துணை முதல்-மந்திரிகள் பதவி பற்றி மந்திரி ராஜண்ணா கூறியதில் தவறு இல்லை; பரமேஸ்வர் பேட்டி
|3 துணை முதல்-மந்திரி பதவிகளை உருவாக்க வேண்டும் என்று மந்திரி ராஜண்ணா கூறியதில் எந்த தவறும் இல்லை என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
3 துணை முதல்-மந்திரி பதவிகளை உருவாக்க வேண்டும் என்று மந்திரி ராஜண்ணா கூறியதில் எந்த தவறும் இல்லை என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
தவறு எதுவும் இல்லை
கர்நாடகத்தில் மேலும் 3 துணை முதல்-மந்திரிகளை நியமிக்க வேண்டும் என்று மந்திரி ராஜண்ணா கூறி இருக்கிறார். அவர் கூறியதில் தவறு எதுவும் இல்லை. அது அவரது தனிப்பட்ட விருப்பமும் ஆகும். எனக்கு துணை முதல்-மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்று ராஜண்ணா கூறி இருக்கிறார். நானும், அவரும் மந்திரிகளாக இருக்கிறோம். ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அதனால் அவர் சொல்லி இருக்கலாம். நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு 3 துணை முதல்-மந்திரிகளை நியமிக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார்.
சட்டசபை தேர்தலை போன்று நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற அனைத்து சமுதாயத்தின் ஓட்டுகளும் கிடைக்க வேண்டும். இதுபற்றி அவர், முதல்-மந்திரி மற்றும் மாநில தலைவருடன் பேச வேண்டும். அதன்பிறகு, காங்கிரஸ் தலைமை 3 துணை முதல்-மந்திரிகளை நியமிப்பதா?, வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்து அறிவிக்கும்.
சைத்ரா குந்தாப்புரா நாடகம்
எம்.எல்.ஏ. சீட் வாங்கி கொடுப்பதாக ரூ.5 கோடி வாங்கி மோசடி செய்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடியும் வரை இந்த வழக்கு சம்பந்தப்பட்ட தகவல்களை பகிரங்கமாக தெரிவிக்க இயலாது. சைத்ரா குந்தாப்புரா மயக்கம் அடைந்து ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார். விசாரணையில் இருந்து தப்பிக்க அது ஒரு நாடகம்.
ரூ.5 கோடி யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது, யாரெல்லாம் பகிர்ந்து கொண்டனர், இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என அனைத்து கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.