விபத்தில் சிக்கிய வாலிபருக்கு உதவிய மந்திரி எம்.பி.பட்டீல்
|விபத்தில் சிக்கிய வாலிபருக்கு மந்திரி எம்.பி.பட்டீல் உதவினார்.
கதக்:
கர்நாடக தொழில்துறை மந்திரியாக இருப்பவர் எம்.பி.பட்டீல். இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக கதக்கில் இருந்து முண்டரகி நோக்கி எம்.பி.பட்டில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் தம்புலா கிராமத்தின் அருகே சென்றபோது, முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் ஒருவர், சாலை தடுப்பு சுவரில் மோதி தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மந்திரி எம்.பி.பட்டீல் உடனடியாக தனது காரை நிறுத்தி கீழே இறங்கி சென்று விபத்தில் சிக்கிய வாலிபருக்கு உதவி செய்தார். அவருக்கு தண்ணீர் கொடுத்ததுடன், கதக் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வாகனம் ஒன்றையும் ஏற்பாடு செய்தார். பின்னர் காயம் அடைந்த வாலிபரை அந்த வாகனத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி உரிய சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தினார். விபத்தில் சிக்கியவருக்கு உதவிய மந்திரி எம்.பி.பட்டீலின் மனிதநேயத்தை அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் பாராட்டினர்.