சிவமொக்காவில் கிரகலட்சுமி திட்டத்தை மந்திரி மதுபங்காரப்பா தொடங்கி வைத்தார்
|சிவமொக்காவில் கிரகலட்சுமி திட்டத்தை மந்திரி மதுபங்காரப்பா தொடங்கி வைத்தார்.
சிவமொக்கா:-
கா்நாடகத்தில் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலின் போது அறிவித்த 5 உத்தரவாத திட்டங்களை காங்கிரஸ் அரசு நிறைவேற்றி வருகிறது. அதில் அன்னபாக்யா, கிரகஜோதி, சக்தி ஆகிய 3 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தநிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை மைசூருவில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கி வைத்தார். இதேப்போல் சிவமொக்காவில் கிரகலட்சுமி திட்ட தொடக்க விழா அம்ேபத்கர் பவனில் நடைபெற்றது. விழாவை மாவட்ட பொறுப்பு மந்திரியும், பள்ளிகல்வித்துறை மந்திரியுமான மதுபங்கரப்பா தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:- காங்கிரஸ் கட்சி கூறிய 5 உத்தரவாத திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். அந்த 4-வது திட்டமான கிரகலட்சுமி திட்டத்தை தற்போது தொடங்கி உள்ளோம். காங்கிரஸ் கட்சி கூறிய வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றும், என்றார். இதையடுத்து மந்திரி மதுபங்காரப்பா கிரகலட்சுமி திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செல்வமணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.