< Back
தேசிய செய்திகள்
அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு மனு: 8ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
தேசிய செய்திகள்

அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு மனு: 8ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

தினத்தந்தி
|
5 April 2024 1:19 PM IST

அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். தற்போது இவர் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக வேலை செய்த போலீஸ் அதிகாரி கணேசனுக்கு முறைகேடாக ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2012-ம் ஆண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து, ஐ.பெரியசாமியை விடுவித்து கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் எம்.பி., எம்.எல்.ஏ. க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். தினந்தோறும் வழக்கின் விசாரணையை நடத்தவும், வரும் ஜூலைக்குள் விசாரணையை முடித்து சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், சரியான காரணங்களை ஆய்வு செய்யாமல் தனி நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளார். எனவே, சென்னை ஐகோர்ட்டு தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீடு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் 8ம் தேதி நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்