தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதில் பிரச்சினை இல்லை; மந்திரி செலுவராயசாமி பேட்டி
|காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துள்ளதால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதில் பிரச்சினை இல்லை என்று மந்திரி செலுவராயசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துள்ளதால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதில் பிரச்சினை இல்லை என்று மந்திரி செலுவராயசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு விதானசவுதாவில் நேற்று விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
மாநிலத்தில் மின்பற்றாக்குறை
மாநிலத்தில் மழை குறைவு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் மின்வெட்டை அமல்படுத்த வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. இந்த விவகாரத்தை முதல்-மந்திரி சித்தராமையா தீவிரமாக எடுத்து கொண்டுள்ளார். இந்த பிரச்சினையை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிராக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேசி வருகிறார். இதற்கு முன்பு குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்த போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் பேரில் நள்ளிரவு 12 மணிக்கு காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது குமாரசாமியின் இதயம் என்ன செய்து கொண்டிருந்தது.
தண்ணீர் திறந்து விடுவதற்கு...
இந்த விவகாரத்தில் குமாரசாமிக்கு மட்டும் இதயம் துடிக்கும். மற்றவர்களுக்கு இதயம் துடிக்காதா?. காவிரி ஒழுங்காற்று குழு தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் தற்சமயம் காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதில் பிரச்சினை இல்லை.
கடவுளின் அருளால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டிலும் அக்டோபர் மாதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தசரா விழா நடைபெற இருப்பதால் கர்நாடகத்திலும் மழை பெய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
119 விவசாயிகள் தற்கொலை
மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக 118 லட்சம் ஹெக்டேர் அளவில் பயிரிடப்படுவது வழக்கம். அதில், 89 சதவீதம் விதைப்பு பணிகள் நடைபெற்றிருந்தது. மழை குறைவால் அந்த பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. மழை குறைவால் 39.74 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு விவசாய பயிர்கள் நாசம் அடைந்துள்ளது.
மாநிலத்தில் வறட்சி நிலவுவதால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசிடம் ரூ.4 ஆயிரத்து 860 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் அரசு அமைந்த பின்பு 900 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதாக பி.சி.பட்டீல் தவறான தகவல்களை கூறி வருகிறார். மாநிலத்தில் இதுவரை 119 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.