சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேட்டில் மந்திரி அரக ஞானேந்திரா சிறைக்கு செல்வார்; மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத் பேட்டி
|சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேட்டில் மந்திரி அரக ஞானேந்திரா சிறைக்கு செல்வார் என்று மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே சித்ரதுர்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதி விசாரணை கேட்டுள்ளார். அவ்வாறு நீதி விசாரணை நடத்தப்பட்டால் அனைத்து தகவல்களையும் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். நீதி விசாரணைக்கு உத்தரவிட அரசு தயாரா?. 'பே-சி.எம்.' போஸ்டர் ஒட்டிய காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர். இப்போது பா.ஜனதாவினர் பி.எப்.ஐ. பாக்கிய என்று காங்கிரஸ் மீது குறை கூறி போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர் ஒட்டியவர்களை இந்த அரசு கைது செய்யுமா?.
இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.
மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத் கூறுகையில், "போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன முறைகேட்டில் போலீஸ் மந்திரி அரகே ஞானேந்திரா சிறைக்கு செல்வார். இதற்கு அவர் தயாராக உள்ளார். காண்டிராக்டா் சந்தோஷ் பட்டீல் தற்கொலையில் போலீசார், மந்திரியாக இருந்த ஈசுவரப்பா மீது தவறு இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் அவர் மீதான குற்றச்சாட்டை மூடிமறைக்க அரசு முயற்சி செய்துள்ளது" என்றார்.