லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரிப்பு: கர்நாடகத்தில் இன்று முதல் பால் விலை உயர்வு
|கர்நாடகத்தில் பால் லிட்டருக்கு ரூ.3 விலை உயர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வால், திருப்பதி கோவில் நிர்வாகம் கர்நாடகத்தில் நெய் கொள்முதலை நிறுத்திவிட்டது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் கர்நாடக பால் கூட்டமைப்பு சார்பில் 'நந்தினி' என்ற பெயரில் பாக்கெட் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பாலின் விலை கடந்த 2 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. சட்டசபை தேர்தல் காரணமாக பால் விலை உயர்வு முடிவு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பீமா நாயக் நியமிக்கப்பட்டார். அவர் முதல்-மந்திரி சித்தராமையாவை நேரில் சந்தித்து பால் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்துமாறு கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பால் விலை உயர்வு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த பால் விலை உயர்வு ஆகஸ்டு 1-ந்தேதி (இன்று) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி சாதாரண பால் விலை ரூ.39-ல் இருந்து ரூ.42 ஆக உயருகிறது. மேலும் அரைலிட்டர் பாலுக்கு ரூ.2 உயருகிறது. முன்பு அரைலிட்டர் சாதாரண பால் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.2 அதிகரித்து ரூ.22-க்கு விற்பனை செய்யப்படும். மேலும் அனைத்து வகையான பால் மற்றும் தயிர் பொருட்களின் விலையும் 3 ரூபாய் அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தில் தினசரி சுமார் 85 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பாலை கர்நாடக பால் கூட்டமைப்பு நிறுவனம் கொள்முதல் செய்து அதை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்கிறது. கர்நாடகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இந்த நந்தினி பால் வினியோகம் செய்யப்படுகிறது.
திட்டமிட்டப்படி இந்த பால் விலை உயர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இனி பொதுமக்கள், பாலுக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பால் விலை உயர்வால் டீ, காபி மற்றும் பால் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது. இதேபோல், ஓட்டல்களில் பார்சல் வழங்கப்படும் டீ, காபியின் விலையும் அதிகரிக்கப்படலாம் என தெரிகிறது.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற திருப்தி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அந்த லட்டுக்கு கர்நாடக பால் கூட்டமைப்பின் நந்தினி நெய் தான் பயன்படுத்தப்படுகிறது. இங்கிருந்து திருப்பதிக்கு நெய் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலை உயருகிறது. நெய் விலையும் அதிகரிக்கப்படுகிறது.
இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகம், நந்தினி நெய் கொள்முதலை நிறுத்தியுள்ளது. பழைய விலைக்கு நெய் வழங்க நந்தினி நிர்வாகம் தயாராக இல்லை. அதனால் அந்த கோவில் நிர்வாகம் நெய் கொள்முதலை நிறுத்திவிட்டு, வேறு நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவர் பீமா நாயக் கூறியதாவது:-
கர்நாடகத்தில் நாளை (அதாவது இன்று) முதல் பால் விலை உயருகிறது. அத்துடன் நெய் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் திருப்பதி கோவில் நிர்வாகம், வேறு நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி கோவிலுக்கு நெய் வினியோகம் செய்வதை நாங்கள் நிறுத்தியுள்ளோம். லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் மாற்றப்படுவதால், அதன் தரத்தில் சமரசம் செய்து கொள்ளப்படுகிறது.
இனி திருப்பதி லட்டு இதற்கு முன்பு இருந்தது போல் அதே சுவை தராது. நாங்கள் தரமான நெய் வழங்குகிறோம். அனைத்து வகையான சோதனைக்கு பிறகே நெய் விற்பனைக்கு செல்கிறது. எங்களின் விலையை விட குறைந்த விலைக்கு வேறு நிறுவனம் நெய் வழங்கினால், லட்டு தரத்தில் சமரசம் செய்து கொள்ளப்படுகிறது என்று நான் கருதுகிறேன்.
இவ்வாறு பீமா நாயக் கூறினார்.