< Back
தேசிய செய்திகள்
மாலத்தீவு அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் ராணுவ அணிவகுப்பு மரியாதை
தேசிய செய்திகள்

மாலத்தீவு அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் ராணுவ அணிவகுப்பு மரியாதை

தினத்தந்தி
|
7 Oct 2024 1:11 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் மாலத்தீவு அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பும், ராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

புதுடெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அழைப்பை ஏற்று, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவில் 5 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இந்தியாவின் டெல்லியில் வந்திறங்கிய அவரை மத்திய வெளியுறவு துறை இணை மந்திரி கீர்த்தி வரதன் சிங் மற்றும் அதிகாரிகள் நேற்று வரவேற்றனர்.

இதன்பின் அவரை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார். இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிபர் முய்சுவை, ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி இருவரும் இன்று வரவேற்றனர். அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில், மாலத்தீவு அதிபர் முய்சுவின் இந்திய பயணம் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பும், ராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது என தெரிவித்து உள்ளது.

இதன்பின்னர், ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதற்காக அதிபர் முய்சு புறப்பட்டு சென்றார். மகாத்மாவின் போதனைகள் தொடர்ந்து நமக்கு உந்துதலாக உள்ளது என மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது. இதனை தொடர்ந்து, பிரதமர் மோடியுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.

இந்த சந்திப்பின் போது இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய இரு நாடுகளின் இருதரப்பு உறவு, பரஸ்பர பலன், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்