மணிப்பூர் முதல்-மந்திரியின் பாதுகாப்பு வாகனம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்
|தாக்குதலைத் தொடர்ந்து, ஜிரிபாம் பகுதியில் உள்ள நிலைமை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி பாதுகாப்பு ஆலோசகரிடம் முதல்-மந்திரி கேட்டுள்ளார்.
இம்பால்:
மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் இன்று ஜிரிபாம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் செல்லும் சாலைகளில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். முதல்-மந்திரியின் பாதுகாப்பிற்காக அவரது தனி பாதுகாப்பு குழுவினர் இன்று இம்பாலில் இருந்து வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியான ஜிரிபாம் நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.
காங்போப்கி மாவட்டம் கே.சினாம் கிராமம் அருகே சென்றபோது, சாலையோரம் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் திடீரென பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அசாம் எல்லையோரம் அமைந்துள்ள காங்போப்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குக்கி தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்துவதால் இந்த தாக்குதலையும் அவர்கள் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பாதுகாப்பு வாகனம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, ஜிரிபாம் பகுதியில் உள்ள நிலைமை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி பாதுகாப்பு ஆலோசகரிடம் முதல்-மந்திரி கேட்டுள்ளார்.
ஜிரிபாம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை செல்வதால் குக்கி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் டி.ஜி.பி.க்கு முதல்-மந்திரி அலுவலகம் பலமுறை எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.