< Back
தேசிய செய்திகள்
புத்தூரில் நடுரோட்டில் கத்தியால் குத்தி பெண் கொலை
தேசிய செய்திகள்

புத்தூரில் நடுரோட்டில் கத்தியால் குத்தி பெண் கொலை

தினத்தந்தி
|
25 Aug 2023 12:15 AM IST

புத்தூர் அருகே நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

புத்தூர்-

புத்தூர் அருகே நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

காதல் விவகாரம்

தட்சிண கன்னடா மாவட்டம் விட்டலா தாலுகா அலிக்கே கிராமத்தை சேர்ந்தவர் கவுரி (வயது 18). இவர் விட்டலாவில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இதேபோல பண்ட்வாலை சேர்ந்தவர் பத்மராஜ் (18). பொக்லைன் வாகன டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் 2 பேருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது.

இதையடுத்து இருவரும் புத்தூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கவுரி, பத்மராஜை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து பத்மராஜ், கவுரியை சந்திக்க முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. மேலும் செல்போனுக்கு தொடர்பு கொண்டால் கவுரி சரியாக பேசவில்லை.

காதலியை கத்தியால் குத்தி கொலை

இதனால் கோபம் அடைந்த பத்மராஜ் கவுரியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி நேற்று கவுரி, புத்தூர் போலீஸ் நிலையம் அருகேயுள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த பத்மராஜ், கத்தியால் கவுரியின் கழுத்தில் குத்தினார். இதில் கவுரி கீழே விழுந்ததும், பத்மராஜ் அவரை விடாமல் 4 முறை கழுத்தில் குத்தினார். வேதனை தாங்க முடியாத கவுரி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்த பத்மராஜ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து கவுரியை மீட்ட அப்பகுதி மக்கள் புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக மங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கவுரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காதலன் கைது

பட்டபகலில் நடந்த இந்த கொலை குறித்து, புத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த தகவலை வைத்து போலீசார், பத்மராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்