< Back
தேசிய செய்திகள்
கை தட்டுவது, செல்போனில் டார்ச் அடிப்பதுதான் இளைஞர்களுக்கு நீங்கள் கொடுத்த வேலைவாய்ப்பா..? - ராகுல் காந்தி
தேசிய செய்திகள்

கை தட்டுவது, செல்போனில் டார்ச் அடிப்பதுதான் இளைஞர்களுக்கு நீங்கள் கொடுத்த வேலைவாய்ப்பா..? - ராகுல் காந்தி

தினத்தந்தி
|
29 July 2024 4:24 PM IST

பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு, விவசாயிகளுக்கு என எந்த ஒரு அறிவிப்புமே இல்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 22-ம் தேதி தொடங்கிய நிலையில், 23-ம் தேதி 2024, 2025-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.அதை தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.

பட்ஜெட் குறித்து காரசார விவாதம், ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே வார்த்தை மோதல், அமளி என அவை நடவடிக்கைகளில் அனல் பறந்தது.

இந்தநிலையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், "பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குருக்ஷேத்திரத்தில் ஆறு பேர் சேர்ந்து அபிமன்யுவை சக்கர வியூகத்தில் சிக்க வைத்து கொன்றனர். கொஞ்சம் ஆராய்ச்சி செய்தேன். அப்போதுதான், சக்கர வியூகத்திற்கு பத்ம வியூகம் என்று பெயர் இருப்பது தெரிய வந்தது. அதாவது, தாமரை வடிவிலானது என்பது தெரிந்தது. சக்கர வியூகம் என்பது தாமரை வடிவில் உள்ளது. 21ம் நூற்றாண்டில், ஒரு புதிய 'சக்கரவியூகம்' உருவாகி இருக்கிறது.

அதுவும் தாமரை வடிவில் உள்ளது. அந்த சின்னத்தை பிரதமர் மார்பில் அணிந்துள்ளார். அபிமன்யுவுக்கு என்ன நடந்ததோ, அதேதான் இந்தியாவுக்கும் நடக்கிறது. இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சிக்கியுள்ளனர். இன்றும் சக்கர வியூகத்தில் ஆறு பேர் உள்ளனர். இன்றும் ஆறு பேர் கட்டுப்படுத்துகிறார்கள். நரேந்திர மோடி, அமித் ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி மற்றும் அதானி ஆகியோர் கட்டுப்படுத்தி வருகிறார்கள்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "நாடு முழுவதும் வினாத்தாள்கள் கசிந்துள்ளன. இது குறித்து பட்ஜெட்டில் ஏதேனும் இடம்பெற்றுள்ளதா?. குறைந்தபட்ச ஆதாரவிலைக்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தை ஏன் இன்னும் அளிக்கவில்லை?. பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்னிவீர் திட்டத்தில் ஓய்வூதியம் தொடர்பாக பட்ஜெட்டில் எதுவும் இடம்பெறவில்லை.

கொரோனா சமயத்தில் கைத்தட்டுவதும், செல்போனில் டார்ச் அடிப்பதும் தான் இளைஞர்களுக்கு நீங்கள் கொடுத்த வேலைவாய்ப்பா..? இந்திய இளைஞர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்..? புதிதாக கொண்டுவரப்பட்ட இன்டர்ன்ஷிப் திட்டத்தால் பெரு நிறுவனங்கள் பயன்பெறும். வேலையில்லா திண்டாட்டத்திற்கு இன்டர்ன் ஷிப் திட்டம் ஒரு பேண்ட் எய்ட் போன்றது தான்.

மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு, விவசாயிகளுக்கு என எந்த ஒரு அறிவிப்புமே இல்லை. நடுத்தர மக்களின் முதுகில் குத்திவிட்டது மத்திய பா.ஜனதா அரசு. அக்னிபாத் திட்டத்தில் சேரும் ராணுவ வீரர்களுக்கு ஒரு ரூபாய் கூட ஓய்வூதியம் வழங்கப்படுவது இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக நடந்த நீட் தேர்வு தொடர்பாக ஒருவார்த்தை கூட மத்திய பட்ஜெட்டில் இடம் பெறவும் இல்லை. பட்ஜெட்டிற்கு முன்பு வரை நாட்டில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் பிரதமர் மோடியை ஆதரித்திருக்கலாம். ஆனால், இந்த பட்ஜெட்டில் மூலதன ஆதாய வரியை உயர்த்தி, நடுத்தர வர்க்கத்தினரை பிரதமர் மோடி தாக்கிவிட்டார்" என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்