< Back
தேசிய செய்திகள்
மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது மைக் துண்டிப்பு - எதிர்க்கட்சிகள் கண்டனம் மாநிலங்களவையில் அமளி
தேசிய செய்திகள்

மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது மைக் துண்டிப்பு - எதிர்க்கட்சிகள் கண்டனம் மாநிலங்களவையில் அமளி

தினத்தந்தி
|
26 July 2023 1:53 PM IST

மணிப்பூர் கலவரம் கொடூரம் குறித்து, நேற்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சித்தலைவர் கார்கே பேசும்போது மைக் அணைக்கப்பட்டதற்கு திமுக எம்.பி. திருச்சி சிவா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் 32 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை திட்டமிட்டபடி நடத்த முடியாத அளவுக்கு மணிப்பூர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறை தொடர்பாகவும், 2 பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட கொடூர சம்பவம் குறித்தும், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் "இந்தியா கூட்டணி" வலியுறுத்தி வருகிறது. மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க தயார் என்று அறிவித்துள்ள மத்திய அரசு, உள்துறை மந்திரி அமித்ஷா மூலம் பதில் அளிக்கும் என்று கூறுகிறது.

ஆனால் எதிர்க்கட்சிகள் இதை ஏற்கவில்லை. பிரதமர் மோடி தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் கடந்த 20, 21, 24, 25-ந்தேதிகளில் 4 நாட்கள் நாடாளுமன்றம் முடங்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க ஒத்துழைப்பு அளிக்கக் கோரி எதிர்க்கட்சி தலைவர் கார்கே உள்பட அனைத்து கட்சி தலைவர்களுக்கும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கடிதம் அனுப்பினார். மணிப்பூரில் வன்முறை ஏன்? ஏற்பட்டுள்ளது என்பதற்கான விளக்கத்தையும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அமித்ஷாவின் கோரிக்கையையும் எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்துவிட்டன.

இன்று காலை மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் 12 மணிக்கு அவை கூடியதும், நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அனைத்துக் கட்சி தலைவர்களிடம் ஆலோசித்து விவாதத்திற்கான தேதி அறிவிக்கப்படும் என்றார்.

நேற்று மாநிலங்களவையில் மணிப்பூர் கலவரக் கொடூரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது மைக் அணைக்கப்பட்டது. இது குறித்து எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் கடும் கண்டனம் தெரிவித்தன.

இது குறித்து பேசும் போது, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா "மைக் அணைப்பது போன்ற நடவடிக்கை மாநிலங்களவையில் எப்போதும் நடந்ததில்லை. ஏன் மைக் அணைக்கப்பட்டது. யார் உத்தரவின் பேரில் இந்தச் செயல் நடந்தது" எனக் கேள்வி எழுப்பித் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார். அதற்கு மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் "கார்கே பேசும்போது மைக் அணைக்கப்படவில்லை" எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்