அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்: மே.வங்காள அரசிடம் அறிக்கை கேட்கும் மத்திய அரசு
|அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு மே.வங்காள பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
புதுடெல்லி,
மேற்கு வங்காளத்தில் ரேஷன் வினியோக ஊழல் வழக்கு தொடர்பாக வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தின் சந்தேஷ்காலியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் சஹாஜஹான் ஷேக்கின் வீட்டில் சோதனை நடத்த கடந்த 5-ந் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர்.
அப்போது, அவர்கள் சென்ற வாகனத்தை மறித்து தாக்கிய திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர், உள்ளே இருந்த அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 3 அதிகாரிகள் காயமடைந்தனர்.மேலும், அவர்களின் செல்போன்கள், மடிக்கணினிகள் ஆகியவற்றை அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும் படி மேற்குவங்காள அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் அதிகாரிகள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அனுப்புமாறும் மாநில அரசை உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.